கடந்த 1997 ஆம் ஆண்டு நடந்த பெயர்ப் பலகைகளில் உள்ள ஆங்கில எழுத்துக்களை தார்பூசி அழிக்கும் போராட்டம் குறித்து, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரின் அந்த பதிவில், "கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வைக்கப்படும் பெயர்ப் பலகைகள் அந்த நிறுவனங்களுக்கான முகவரி மட்டுமல்ல. அந்த நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலத்திற்கே அவைதான் முகவரி ஆகும். ஒரு நகரத்தின் சாலைகளில் வெளிநாட்டவரோ, வெளிமாநிலத்தவரோ பயணிக்கும்போது, அங்குள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் எந்த மொழிகளில் உள்ளனவோ, அதை அடிப்படையாக வைத்து அந்த மொழிப் பேசும் பகுதிக்குள் பயணிக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
ஆனால், சென்னையில் வெளிநாட்டவர் ஒருவர் பயணம் செய்தால், அவருக்கு தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வு நிச்சயமாக ஏற்படாது. அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் இருப்பது போன்ற உணர்வுதான் ஏற்படும். இதற்குக் காரணம் சென்னை மாநகரக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள பெயர்ப் பலகைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதுதான். சென்னையில் மட்டும்தான் இந்த நிலை என்றில்லை. குக்கிராமங்களில் கூட ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை எழுதுவது நாகரீகமாகி விட்டது. அதேபோல், தமிழ்நாட்டில் செய்யப்படும் பெரும்பாலான விளம்பரங்களும் ஆங்கில மொழியில்தான் அமைந்துள்ளன.
தமிழனுக்கு தமிழ் மீது பற்று இல்லையா?
இவற்றை தமிழகத்தின் சாபக்கேடாகத்தான் நான் ((மருத்துவர் இராமதாஸ்) பார்த்தேன். திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு வரும் வழியில் அமைந்துள்ள 90% கடைகள் மற்றும் வணிக நி-றுவனங்களின் பெயர்ப் பலகைகள் ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டிருக்கின்றன. சில பெயர்ப் பலகைகளில் மட்டும் ஆங்கிலத்துடன் சேர்த்து கண்ணுக்குத் தெரியாத வகையில் தமிழிலும் எழுதப்பட்டிருக்கும். இந்தப் பெயர்ப் பலகைகளைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குள் கோபம் பீறிட்டு வரும். தமிழர்களுக்கு தாய் மொழியான தமிழ் மீது பற்றே இல்லையா? என்ற வினாவை எனக்குள் நானே பல்லாயிரம் முறை எழுப்பிக்கொண்டிருக்கிறேன்.
இத்தனைக்கும் தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? என்பது குறித்து 3 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 1983ஆம் ஆண்டு திசம்பர் 29, 1984ஆம் ஆண்டு திசம்பர் 29 என இரு அரசாணைகள் எம்ஜிஆர் ஆட்சியிலும், கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் 1990ஆம் ஆண்டு திசம்பர் 19ஆம் தேதி ஓர் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டன.
இவை தவிர பெயர்ப்பலகைகள் தொடர்பாக 1948&ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8&ஆம் தேதி 575 எண் கொண்ட அரசாணையை எம்.ஜி.ஆர் வெளியிட்டார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் மட்டும் பெயர்ப்பலகைகள் குறித்து 3 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. இவற்றை வணிகர்கள் பின்பற்றுவதில்லை என்பது ஒருபுறமிருக்க, இவற்றை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கும் இல்லை.
திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழ் மொழியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றுகூட கட்டாயப்படுத்தப்படவில்லை. மாறாக, தமிழ் எழுத்துக்கள் பெரிதாகவும், பிற மொழி எழுத்துக்கள் சிறிய அளவிலும் இருக்க வேண்டும் என்று தான் அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, எம்ஜிஆர். ஆட்சிக்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 575&இல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
அரசாணை விவரங்கள்
1. எல்லா நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும். பிறமொழிகள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும் ஏனைய மொழிகள் அதற்கு அடுத்தும் வர வேண்டும்.
2. பெயர்ப் பலகைகளில் பிற மொழிகளைப் பயன்படுத்தும் போது தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகளுக்கான இடங்கள் 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.
3. பெயர்ப் பலகையிலுள்ள எழுத்துக்கள் சீர்திருத்த வரி வடிவில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இதைக்கூட நடைமுறைபடுத்த வணிக நிறுவனங்களும், தமிழக ஆட்சியாளர்களும் முன்வரவில்லை. கோரிக்கைகளின் மூலமாக மட்டும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழை கொண்டுவந்துவிட முடியாது என்பது எனக்கு உறுதியாக தெரிந்தது. இதைத் தொடர்ந்து, தமிழ் இல்லாமல் பிற மொழிகளில் எழுதப்பட்டுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைககளை தார் பூசி அழிக்கும் போராட்டம் 28.4.1997 அன்று நடத்தப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தது, அதன்பிறகுதான் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழ் மொழியில் அமைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டது. அதனால், பாட்டாளி மக்கள் கட்சி நடத்தவிருந்த போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு கிடைத்தது.
கலைஞர் வேண்டுகோள்
பாட்டாளி மக்கள் கட்சி நடத்தவிருக்கும் போராட்டம் தமிழக சட்டப்பேரவையிலும் விவாதப் பொருளானது. 1997ஆம் ஆண்டு, ஏப்ரல் 16ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை நடைபெற்ற தமிழ் ஆட்சி மொழி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் இதுகுறித்து உறுப்பினர்கள் பேசினார்கள். அதற்கு விடையளித்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் கலைஞர், “தமிழ் உணர்வு கொண்ட கட்சியான பா.ம.க. சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் பொதுவான இடத்தில் நடப்பது நல்லது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அஞ்சல் நிலையங்கள், இரயில் நிலையங்கள் போன்ற இடங்களில்தான் நடத்தினோம். தனியார் நிறுவனங்கள் முன்பு போராட்டம் நடத்தப்போவதாகப் பா.ம-.க. அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் நுழைந்து வன்முறை, சூறையாடுதல் போன்ற சம்பவங்களை நடத்தி விடக் கூடும்.
நான் பா.ம.க.வுக்கு உறுதி கூறுகிறேன். முதலில் மீண்டும் வணிகர்களுக்கு ஆணை அனுப்பலாம். அரசு ஆணைக்குக் கட்டுப்பட மறுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இதனால் இந்தப் போராட்டம் தேவை இல்லை எனப் பா.ம.க.வுக்கு இந்தச் சபை மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, பெயர்ப் பலகைகளை தார் பூசி அழிக்கும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தேன்-. 1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த போராட்டம், ஜூன் மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தார்பூசி அழித்தால், அப்போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து வன்முறை மற்றும் சூறையாடுதல் போன்ற குற்றங்கள் நடந்துவிடும் என்று முதலமைச்சர் கலைஞர் கூறியிருந்தததை ஏற்று, சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் பெயர் பலகையில் உள்ள ஆங்கில எழுத்துக்களை தார் பூசி அழிப்பதாக போராட்டத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இதுதொடர்பாக, 11.6.1997 அன்று நான் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
போராட்டத்தில் மாற்றம்
“தமிழக அரசு ஆணைகள் வெளியிட்டும், தவணைகள் பல தந்தும் தமிழில் பெயர்ப் பலகைகள் வைத்திட பல நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. இதுபோன்ற நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
வட மாநிலங்களிலும், கர்நாடகத்திலும் அந்தந்த மாநில மொழிகளிலேயே பெயர்ப் பலகைகள் உள்ளன. எண்களைக்கூட இந்தியிலும் கன்னடத்திலும், எழுதிடும் அளவுக்கு அங்கே தீவிரம் காட்டப்படுகிறது- ஆனால், தமிழகத்திலோ நமது குறைந்த பட்ச கோரிக்கையான “தமிழில் பெயர்ப் பலகைகள்” என்கின்ற ஒன்றுகூட இன்றைய நாள்வரை நிறைவேறாமலேயே இருக்கிறது.
எனவேதான், தமிழில் பெயர்ப் பலகைகள் என்பதை வலியுறுத்தும் பொருட்டு பாட்டாளி மக்கள் கட்சி முதற் கட்டமாகத் “தமிழைப் புறக்கணிக்கும் பெயர்ப் பலகைகளைத் தார்பூசி அழிக்கும்” போராட்டத்தை வருகிற 14ஆம் தேதி (சனிக் கிழமை) தமிழகமெங்கும் நடத்திடத் திட்டமிட்டுள்ளது” இவ்வாறு அந்த அறிக்கையில் நான் குறிப்பிட்டிருந்தேன்.
அறிவிக்கப்பட்டவாறே, ஜுன் 14ஆம் தேதி அண்ணாசாலையில் உள்ள அஞ்சல் நிலையத்தில் உள்ள ஆங்கில எழுத்துக்களை நான் தார்பூசி அழித்தேன். இதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அன்று மாலையே விடுதலை செய்யப்பட்டேன். இதேபோல், தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் பெயர்ப் பலகைகளில் உள்ள ஆங்கில எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய நான், “பெயர்ப் பலகைகளில் உள்ள ஆங்கில எழுத்துக்களை தார்பூசி அழிக்கும் இந்தப் போராட்டம் முடிவு அல்ல. எங்களது முதல் கட்டப் போராட்டம்தான். அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுத்திருக்கும் எச்சரிக்கை. தமிழ்நாட்டில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், எங்களின் போராட்டம் தொடரும். தமிழுக்கு முக்கியத்துவம் தராமல் எழுதப்பட்ட பிறமொழிப் பெயர்ப் பலகைகளைப் பாரபட்சம் பார்க்காமல் அழிப்போம்” என்று எச்சரிக்கை விடுத்தேன்.
அவதூறு பரப்புரை
பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தை சகித்துக்கொள்ள முடியாத சில சக்திகள், பெயர்ப் பலகைகளில் உள்ள ஆங்கில எழுத்துக்களை தார்பூசி அழிக்கும் போராட்டத்தின் நோக்கம் குறித்து அவதூறு செய்திகளைப் பரப்பின-. எனது செயல்பாடுகளுக்கும் உள்நோக்கங்கள் கற்பிக்கப்பட்டன.
எனினும், இந்த அவதூறு பரப்புரைகள் மக்களிடம் எடுபடவில்லை. இந்தப் பரப்புரைகளுக்கு பதிலளித்த நான், “தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராகவோ, வணிகர்களுக்கு எதிராகவோ சட்டம் - ஒழுங்கை மீறுவதற்காகவோ இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை. தமிழுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கத்தில்தான் பெயர்ப் பலகைகளில் ஆங்கில எழுத்துக்களை தார்பூசி அழிக்கும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்துகிறது” என்று விளக்கமளித்தேன்.
பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு ஒருசில கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாறின. ஆனாலும் அந்த மாற்றம் பெரிய அளவில் நடைபெறவில்லை. அதனால், ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிப் பெயர்ப் பலகைகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் ஒன்றை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்தப் போராட்டத்தை நடத்துவதற்காகவே புதிய அமைப்பு ஒன்று அடுத்த சில ஆண்டுகளில் உருவானது.