தமிழக முதல்வர் உடனே ஆளுநரை சந்திக்க வேண்டும்., மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.!  - Seithipunal
Seithipunal


7 தமிழர் விடுதலை: ஆளுனரிடம் தமிழக அரசு மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது தமிழக ஆளுனர் தான்... இந்தியக் குடியரசுத் தலைவர் அல்ல என்பதை பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம்  தெரிவித்திருக்கும் கருத்துகள் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளன. இந்த உண்மை ஆளுனர் மாளிகைக்கும் நன்றாகத் தெரியும் என்ற போதிலும் முடிவெடுப்பதில் காலதாமதம் செய்வது நியாயமல்ல.

உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது சில விஷயங்களை நீதிபதிகள் தெளிவுபடுத்தி விட்டனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் தமிழக ஆளுனர் காலதாமதம் செய்வது ஏற்கத்தக்கதல்ல; இந்த விஷயத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரை மீது முடிவெடுக்க வேண்டியது தமிழக ஆளுனர் தான்; 

7 தமிழர் விடுதலை குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72&ஆவது பிரிவின்படி இந்திய குடியரசுத் தலைவர் முடிவெடுக்க முடியாது என்பன தான் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய விஷயங்கள் ஆகும். இதையே தான் பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியும் வலியுறுத்தி வருகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து விரைவாக முடிவெடுப்பதற்கு உதவும் என்பதில் ஐயமில்லை.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் எந்த குற்றமும் செய்யாமல் கைது செய்யப்பட்ட பேரறிவாளன்  மற்றும் 6 தமிழர்கள் 31 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர். அவர்களில் பேரறிவாளன் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை; அவரது வாக்குமூலத்தை திரித்து எழுதியதால் தான் அவர் தண்டிக்கப் பட்டார் என்று வழக்கின் விசாரணை அதிகாரியான தியாகராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். 7 தமிழர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டு விட்ட நிலையில், தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகும் விடுதலை செய்வதற்கு மறுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. அவர்களுக்கு இழைக்கப்படும் மனித உரிமை மீறல் நீடிப்பது அனுமதிக்கக்கூடாது.

அதற்காக மேற்கொள்ளப்பட்ட தொடர் சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளின் பயனாகத் தான் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை கடந்த 09.09.2018 அன்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதன்பின் 1186 நாட்களாகியும் ஆளுனர் எந்த முடிவும் எடுக்கவில்லை. அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் 900 நாட்கள் கழிந்த நிலையில், அது குறித்து தம்மால் முடிவெடுக்க முடியவில்லை என்று கூறி, 7 தமிழர் விடுதலை குறித்த கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுனர் அனுப்பி வைத்துவிட்டதாக  கூறியது சட்டத்திற்கு எதிரானது ஆகும். 

7 தமிழர் விடுதலை தொடர்பாக 15.09.2021 அன்று ஆளுனர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், இந்த விஷயத்தில் மத்திய அரசிடம் ஆளுனர் ஆலோசிக்க மாட்டார்; அவரே அரசியல் சட்டப்படி முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இன்னும் 3&4 நாட்களில் முடிவெடுப்பதாக ஆளுனர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்த சில நாட்களில் இந்த விவகாரம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது கண்டிப்பாக 7 தமிழர் விடுதலையை தாமதப்படுத்தும் செயல் தான்.

7 தமிழர் விடுதலை விவகாரம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டதால், இந்த விவகாரத்தில் தாமதமும், பின்னடைவும் ஏற்பட்டது உண்மை தான். ஆனால், உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகளால் நிலைமை தெளிவாகியிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 7 தமிழர் விடுதலையை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கும்  நிலையில், இது குறித்து தமிழக ஆளுனரே முடிவெடுக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்த வேண்டும்.

7 தமிழர் விடுதலை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். ஆளுனருக்கு கூடுதல் அழுத்தம் தருவதற்காக இந்த விஷயத்தில் ஒத்தக் கருத்துள்ள பாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழுவையும் அழைத்துச் செல்லலாம். 

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு அடுத்த மாதம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக இந்த விஷயத்தில் ஆளுனர் நல்ல முடிவு எடுப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். புத்தாண்டிற்குள்ளாக 7 தமிழர்களுக்கும் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும்." என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About 7 tamil people release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->