கணக்கெடுப்பு நடத்தி அரசியலமைப்பு சட்டத்திருத்தம் வேண்டும் - மத்திய அரசுக்கு மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வசதியாக, ஒவ்வொரு துறையின் உயர் பதவிகளிலும் அவர்களின் எண்ணிக்கை குறித்த அளவிடக் கூடிய புள்ளிவிவரங்களைத்  திரட்ட மத்திய அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.  இதற்கான கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான விவரங்களைத் திரட்டவும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு இட ஒதுக்கீடு 1992&ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிற்குப் பிறகு பல்வேறு மாற்றங்களை சந்தித்தது. 2006&ஆம் ஆண்டு நாகராஜ் வழக்கிலும், 2018&ஆம் ஆண்டு ஜர்னைல் சிங் வழக்கிலும் தீர்ப்பளித்த  உச்சநீதிமன்றம், மத்திய அரசின் உயர்பதவிகளில் பட்டியலின, பழங்குடியினர் போதிய எண்ணிக்கையில் இல்லை என்பதை அளவிடக்கூடிய புள்ளிவிவரங்களுடன் நிரூபித்தால் மட்டும் தான் அவர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று ஆணையிட்டது. 

பட்டிலின மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக 11 உயர்நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் கடந்த ஜனவரி 28&ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தான் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அதே நேரத்தில் பற்றாக்குறை பிரதிநிதித்துவத்தின் அளவை அரசுகளே தீர்மானிக்கலாம்  என்றும் ஆணையிட்டிருந்தது.

அதனடிப்படையில், மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, ஒவ்வொரு துறையின் உயர்பதவிகளிலும்  அவர்களின் பிரதிநிதித்துவம் எவ்வளவு குறைவாக உள்ளது என்பதற்கான புள்ளிவிவரங்களைத் திரட்டி தரும்படி அனைத்துத் துறைகளின் தலைவர்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறது. 

அதற்கான ஆணையை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை கடந்த வாரம் பிறப்பித்திருக்கிறது. ஒடுக்கப்பட்டோருக்கு பதவி உயர்வில் வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை அவசியமாகும். இப்பணிகளை மத்திய அரசு விரைந்து முடித்து பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.

அதே நேரத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கைகளை மத்திய அரசு புறம் தள்ள முடியாது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பல்வேறு காலகட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் எழுப்பிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. அப்போதெல்லாம் அதற்காக கூறப்பட்ட காரணம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கினால் அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என்பது தான். ஆனால், இப்போது காலம் மாறியிருக்கிறது.

அரசுத் துறைகளின் உயர்பதவிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்றால், பதவி உயர்வில்  இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாட்டை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கும் நீட்டிக்கச் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. அதுமட்டுமின்றி, மத்திய அரசின் உயர்பதவிகளில் மட்டுமின்றி, சாதாரண பணிகளில் கூட இன்று வரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை நிரூபிப்பதற்கு உறுதியான, திடமான புள்ளிவிவரங்கள் உள்ளன.

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு வழக்கில், கடந்த மார்ச் 30-ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், மத்திய அரசின் 75 துறைகளில் மொத்தமுள்ள 27,55,430  பணியாளர்களில் பட்டியலினத்தவர் 4,79,301 (17.30%), பழங்குடியினர் 2,14,738 (7.7%) பிற பிற்படுத்தப்பட்ட  வகுப்பினர் 4, 57,148 (16.50%) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசுப் பணிகளில் 27% ஓபிசி இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அனைத்து நிலை பணிகளிலும் ஓபிசி பிரதிநிதித்துவம் அனுமதிக்கப்பட்டதற்கும் குறைவாக 16.50% என்ற அளவில் தான் இருக்கிறது எனும் போது, உயர்பதவிகளில் அவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. பதவி உயர்வில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இதை விட வலிமையான காரணம் தேவையில்லை.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் சில பணிகளுக்கான பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வந்த பதவி உயர்வை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ரத்து செய்து விட்டன. இதற்காக 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 1(2), 40, 70 ஆகிய பிரிவுகளையும் செல்லாது என்று அறிவித்து விட்டன. இத்தகைய சூழலில் மத்திய, மாநில அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமானால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது மட்டும் தான் ஒரே வழியாகும்.

பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை காக்க 1995-ஆம் ஆண்டிலும், 2012-ஆம் ஆண்டிலும் அரசியலமைப்புச் சட்டத்தில் இரு முறை திருத்தங்கள் செய்யப்பட்டன. அதேபோல், மத்திய அரசின் உயர்பதவிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் குறித்த புள்ளிவிவரங்களைத் திரட்டி, அவற்றின் அடிப்படையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து ஓபிசிகளுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்"

இவ்வாறு அந்த அறிக்கையில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Central Govt job Reservation issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->