எவ்வகையிலும் இது நியாயமல்ல., தமிழக அரசுக்கு மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மூடப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றி, இப்போது மாற்றுப் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள 1820 மருத்துவர்களையும், 1420 பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களையும்  மார்ச் 31-ஆம் தேதியுடன் பணி நீக்கம் செய்யும்படி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரை பணயம் வைத்து ஈடுபட்ட அவர்களை நீக்குவது எவ்வகையிலும் நியாயமல்ல என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்ட போது, அவற்றுக்காக 1820 மருத்துவர்களும், 1420 பன்நோக்கு மருத்துவ பகுதிநேர பணியாளர்களும் ஓராண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டனர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 

ஆனால், அவர்கள் ஓராண்டு பணிக்காலத்தில் செய்த சேவைகள் எளிதில் புறந்தள்ள முடியாதவை. கடந்த ஆண்டில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்ட போதிலும், சுமார் 2 மாதங்கள் மட்டும் தான் அவை முழுமையாக செயல்பட்டன. அதற்குள்ளாக தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியதால், அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கொரோனா பரவல், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட ஆபத்துகள் இருந்த போதிலும், அவற்றை பொருட்படுத்தாமல் மருத்துவர்களும், பிற பணியாளர்களும் பணியாற்றினார்கள். அவர்களில் பலர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நலம் பெற்று பணிக்கு திரும்பினர். 

இப்போதும் கூட அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 19 வகையான பணியிடங்களில் எந்தக் குறையுமின்றி  பணியாற்றி வருகின்றனர். அவர்களின் சேவையை தமிழ்நாடு அரசும் அங்கீகரித்துள்ளது. இத்தகைய சூழலில் அவர்களை பணி நீக்கம் செய்வதை நியாயப்படுத்த முடியாது; ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

அம்மா கிளினிக் மருத்துவர்களை பணி நீக்கம் செய்ய கடந்த காலங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. திசம்பர் மாதத்துடன் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்ட நிலையில், ஜனவரி மாத இறுதியில், அவர்கள் பணி நீக்கப்படுவதாக வாய்மொழியாக ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து  மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். பாட்டாளி மக்கள் கட்சியும் அந்த முடிவை கடுமையாக எதிர்த்தது. அதைத் தொடர்ந்து தான் மருத்துவர்களின் பணிக்காலம் மார்ச் மாத இறுதி வரை நீடிக்கப்பட்டது.

அப்போது மருத்துவர்களின் பணிக்காலத்தை மார்ச் மாதம் வரை என்னென்ன காரணங்களுக்காக அரசு  நீட்டித்ததோ, அதே காரணங்களுக்காக அவர்களை இனியும் பணியில் நீட்டிக்கச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 19-ஆம் தேதி வரை 9 கோடியே 98 லட்சம் பேருக்கு மட்டும் தான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 

12 வயதுக்கும் மேற்பட்டவர்களை மட்டும் கணக்கில் கொண்டாலே இன்னும் 4 கோடி தடுப்பூசிகள் போடப்பட வேண்டியிருக்கும். இது இமாலய பணியாகும். அதற்கு இந்த மருத்துவர்கள் மற்றும் பன்நோக்கு மருத்துவ பணியாளர்களின் சேவை தேவைப்படும்.

கொரோனா மூன்று அலைகளின் தாக்குதலுக்குப் பிறகு குக்கிராமங்களில் தொடங்கி, பெருநகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் மக்களின் மருத்துவத் தேவைகள் அதிகரித்துள்ளன. இப்போதிருக்கும் மருத்துவர்களைக் கொண்டு அந்தத் தேவைகளை நிறைவேற்ற முடியாது என்பதை மருத்துவத்துறை உயரதிகாரிகளே தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கின்றனர். 

இத்தகைய சூழலில் அம்மா மினி கிளினிக் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்கப்பட்டால், அது  மக்களுக்கும் பயனளிக்கும்; பணியில் உள்ள அரசு மருத்துவர்களின் பணிச்சுமையையும் குறைக்கும்.

அம்மா மினி கிளினிக் மருத்துவர்களுக்கு ரூ.60 ஆயிரமும், பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு  ரூ.6 ஆயிரமும் மாத ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. அவர்கள் அனைவரும் இம்மாத இறுதியுடன் பணி நீக்கம் செய்யப்பட்டால், அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும்; அவர்களின் குடும்பங்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகும். அத்தகைய சூழலை  தமிழ்நாடு அரசு  ஏற்படுத்தி விடக் கூடாது.

தமிழக அரசின் மருத்துவ நிறுவனங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான தேவை இருக்கும் நிலையில், அவர்களை இப்போதுள்ள நிலையிலேயே பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு எப்போது மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிய மருத்துவர்கள்,  மருத்துவப் பணியாளர்களை தேர்ந்தெடுக்க விரும்புகிறதோ, அப்போது இவர்களை முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்து பணி நிலைப்பு வழங்க முன்வர வேண்டும்" என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Mini Clinic Staff Issue March


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->