2010-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தை கையில் எடுத்த மருத்துவர் இராமதாஸ்.! வேற லெவல் திட்டம்.! - Seithipunal
Seithipunal


கிராம ஊராட்சிகளின் கிராமசபைகள் போன்று தமிழ்நாட்டின் நகரங்களில் ஏரியா சபைகள் அமைக்கப்பட வேண்டும் என, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கும் தமிழக மக்களின் செழிப்பான வாழ்க்கைக்கும் உள்ளாட்சி ஜனநாயகத்தை வலிமையாக்குவது ஒரு முதன்மைத் தேவை ஆகும். மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்யும் அரசாங்கம் மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே இருப்பது தான் நியாயமானது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை தமிழக அரசு பகிர்ந்தளிக்க வேண்டும். கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடப்பது போல நகரங்களில் ஏரியா சபை (Area Sabha) கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

2007 வீரப்பமொய்லி தலைமையிலான இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணைய அறிக்கை நகர்ப்புறங்களில் மூன்றடுக்கு ஆட்சியமைப்பை பரிந்துரை செய்தது. இதன்படி மாநகராட்சி, நகராட்சிகளுக்கு கீழே வார்டு குழுக்களும் ஏரியா சபைகளும் அமைக்கப்பட வேண்டும் எனும் பரிந்துரையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.

ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் (முன்பு JNNURM இப்போது AMRUT) கீழ் மத்திய அரசு நிதியை பெறுவதற்கான முன் நிபந்தனையாக மாநில அரசுகள் ஏரியா சபை மற்றும் வார்டு குழு அமைப்பதற்கான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு நிர்பந்தம் செய்தது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் வார்டு குழு மற்றும் ஏரியா சபைகள் அமைக்கும் சட்ட திருத்தங்கள் 2010ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டத்தின் படி மாநகரங்களில் ஒரு வார்டுக்கு 10 சபைகளுக்கு மிகாமலும், இதர நகரங்களில் ஒரு வார்டுக்கு 5 சபைகளுக்கு மிகாமலும் ஒவ்வொரு வார்டிலும் ஏரியா சபைகள் அமைக்கப்பட வேண்டும். அந்தந்தப் பகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் ஏரியா சபை உறுப்பினர்கள். அவர்கள் ஏரியா சபை பிரதிநிதிகளை தேர்வு செய்வார்கள்.

பிரதிநிதிகள் தமக்குள் ஒருவரை ஏரியா சபைத் தலைவராக தேர்வு செய்வார்கள். வார்டு அளவில் ஏரியா சபை தலைவர்களை உள்ளடக்கிய வார்டு குழு இருக்கும். நகர்மன்ற உறுப்பினர் வார்டு குழு தலைவராக இருப்பார்.

இவ்வாறாக, தமிழ்நாட்டின் நகரங்களில் ஏரியா சபைகள் மற்றும் வார்டு குழுக்களை அமைக்கும் சட்டம் 2010ஆம் ஆண்டிலேயே கொண்டுவரப்பட்டாலும், இன்னமும் அதனை செயல்படுத்தும் விதிகளை தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை.

ஏரியா சபைகளும் வார்டு சபைகளும் சாதாரணமான சங்கங்கள் அல்ல. அவை அதிகாரப்பூர்வமான ஆட்சி அமைப்புகளாக இருக்க வேண்டும். கிராமத்துக்கு தேவையான திட்டங்களை கிராம சபைகள் தீர்மானிக்க வேண்டும் என்பது போல, நகரங்களில் ஏரியா அளவிலான திட்டங்களை தீர்மானிக்கும் அமைப்பாக ஏரியா சபைகள் இருக்க வேண்டும். தமது பகுதிக்கு தேவையான பணிகளை தாமே தேர்ந்தெடுத்து செயல்படுத்துவதற்கான நிதி அதிகாரத்தையும் இக்குழுக்கள் கொண்டிருக்க வேண்டும். 

உள்ளாட்சி அரசுகள் ஜனநாயக அடிப்படையில் மக்களுக்குப் பதில்சொல்லும் பொறுப்புடைமையை நிலைநாட்ட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து புதிய நகர்ப்புற உள்ளாட்சி அரசுகள் அமைந்தவுடன், ஒவ்வொரு மாநகராட்சியிலும் நகராட்சியிலும் வார்டு குழுக்கள் மற்றும் ஏரியா சபைகள் அமைப்பதற்கான விதிகளை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrRamadoss say about Area sabha


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->