உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு 127-வது பிறந்தநாள்: அவரது நேர்மையை போற்றுவோம் - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


நிபந்தனை நாயகரான, உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு 127-வது பிறந்தநாள் இன்று : அவரது நேர்மையை இந்நாளில் போற்றுவோம் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்தியில், "நிபந்தனைகளின் நாயகர் ஓமந்தூரார் என்றும் ஓ.பி.ஆர். என்றும் அழைக்கப்படும் ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியாருக்கு இன்று 127-ஆவது பிறந்தநாள். எனது வசிப்பிடத்திற்கு மட்டுமின்றி, என் மனதிற்கும் மிகவும் நெருக்கமானவர்.

ஓமந்தூரார் என்றால் சிலருக்கு சென்னையில் அவரது பெயரால் அமைந்த தோட்டத்தில் தலைமைச்செயலகமாக கட்டப்பட்டு, இப்போது மருத்துவமனையாக மாறியிருக்கும் கட்டிடம் நினைவுக்கு வரும்; வரலாறு தெரிந்த சிலருக்கு அவர் தான் சுதந்திரத்திற்கு பிந்தைய சென்னை மாகானத்தின் முதலாவது பிரீமியர் என்பது நினைவுக்கு வரும்;

ஆனால், எனக்கு ஓமந்தூரார் என்றாலே உத்தமர் என்ற சொல் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர் தனிப்பட்ட வாழ்விலும், பொதுவாழ்விலும் தூய்மையானவராக திகழ்ந்தவர். தாம்  மட்டுமின்றி, தம்மைச் சுற்றியுள்ள அனைவரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் ஓமந்தூரார்.

அதற்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன்....

இவர் ஒருமுறை திண்டிவனம் விருந்தினர் மாளிகையில் தனது பணியின் காரணமாக தங்கிவிட்டு சென்னை திரும்பினார். அடுத்த நாள் காலையில் அவரது மகிழுந்து ஓட்டுனர் ஒரு பலாப்பழத்தை நறுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

அது ஏது என்று  விசாரித்தார். அதைக்கேட்ட ஓட்டுனர், அதை திண்டிவனம் விருந்தினர் மாளிகை தோட்டத்திலிருந்து பறித்து வந்ததாக கூறினார். உடனே முதலமைச்சரான ஓமந்தூரார் தனது பையிலிருந்த இரண்டு ரூபாய் எடுத்து ஓட்டுனரிடம் கொடுத்து, உடனே திண்டிவனம் போய் அந்த பலாப்பழத்தைக் கொடுத்துவிட்டு வர உத்தரவிட்டார்.

அந்த நாளில் சென்னையில் இருந்து திண்டிவனம் போய் வர இரண்டு ரூபாய் தான் பேருந்துக் கட்டணம் என்பதால் தான் அவர் ரூ. 2 கொடுத்தார். அதுமட்டுமின்றி,  அந்த இரண்டு ரூபாய் ஓட்டுனரின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.  

அதிர்ந்து போன ஓட்டுனர், ‘‘அந்த பலாப்பழத்தின் விலையே ஒரு ரூபாய் தான் அதை கொடுப்பதற்கு இரண்டு ரூபாய் செலவு செய்ய வேண்டுமா?’’ என்றார். அதற்கு ஓமந்தூரார் உறுதியாகவும், தெளிவாகவும் பதிலளித்தார்: ‘‘இந்த இரண்டு ரூபாய், நீ அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்கான அபராதம்’’ என்றார்.

ஓமந்தூரார் பதவியில் இருந்த காலத்தில் ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் சென்னை பொது மருத்துவமனையில்  அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களை அழைத்த ஓமந்தூரார்,‘‘எல்லா மக்களுக்கும் கொடுக்கப்படுகின்ற மருந்துகளும் கவனிப்பு முறைகளும் தான் எனக்கும் கொடுக்கப் படவேண்டும். எனக்கென்று தனியாக மருத்துகளோ, கவனிப்புகளோ கூடாது. வெளிநாட்டிலிருந்து மருந்துகளையோ, மருத்துவர்களையோ வரவழைக்கக் கூடாது. எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சிகிச்சைக்குப் பின் என்னிடம் வந்து எந்த சலுகையும் கேட்கக் கூடாது’’ என்று நிபந்தனை விதித்தார்.  

தனது நேர்மைக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நிபந்தனைகளை விதித்துக் கொண்டே இருப்பது ஓமந்தூராரின் வழக்கம். அதன் காரணமாகவே அவர் நிபந்தனை நாயகன் என்று அழைக்கப்பட்டார்.

ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே  முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தான்.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் அரசுக்கு கிடைக்கும் ரூ.18 கோடி வரி வருவாய் போய்விடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்த போது, ‘‘ இந்த 18 கோடிக்காக மதுக்கடைகளை நடத்தினால், அதன் தீமைகளால் மக்களுக்கு ரூ.81 கோடி செலவாகும். அதை அனுமதிக்க  மாட்டேன்’’ என்று மறுத்து தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திய மகான் அவர்.

உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மீது எனக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. அதனால் தான் ஓமந்தூராரின் நூற்றாண்டு விழாவை 1995-ஆம் ஆண்டில் தமிழக அரசோ, அவர் தலைவராக இருந்த கட்சியோ கொண்டாடாத நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் விழா எடுத்துக் கொண்டாடினேன்.

அந்த விழாவுக்கு அப்போதைய ஆளுனர் சென்னாரெட்டியை சிறப்பு விருந்தினராக அழைத்தேன். கடந்த 2016-ஆம் ஆண்டு ஓமந்தூரில் தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஓமந்தூராரின் 121-ஆவது பிறந்தநாள் விழாவிலும் அப்போதைய மத்திய அமைச்சர் வெங்கயாநாயுடுவுடன்  கலந்து கொண்டேன்.

உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் வழங்கியதற்கு இணையான தூய்மையான நிர்வாகத்தை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமும் நோக்கமும். அந்த இலக்கை எட்ட கடுமையாக உழைப்போம். அதற்கான பயணத்தில் ஓமந்தூர் பி. இராமசாமி ரெட்டியார் நமக்கு வழிகாட்டுவார்!"

இவ்வாறு அந்த செய்தியில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrRamadoss Say About Omanthur Ramasamy Rediyar Birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->