ஈரோட்டுக்கும் செங்கல்லுக்கும் என்ன சம்பந்தம்.. உதயநிதி ரவுண்டு கட்டிய எடப்பாடி..!!
Edappadi Palaniswami criticized Minister Udayanidhi Stalin
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
திறந்தவெளி வாகனத்தில் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு உடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசையும் உதயநிதி ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது "இத்தனை நாட்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்யும் திமுகவினர் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கொண்டு வந்த ஒரு திட்டத்தை அவர்களால் சொல்ல முடியுமா?
திமுக அமைச்சர் உதயநிதி ஒரு செங்கல்லை தூக்கிப் பிடித்துக் கொண்டார். அந்த செங்கலுக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் என்ன சம்மந்தம். திமுகவினரால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு செய்த சாதனைகள் சொல்லி வாக்கு கேட்க ஒன்றுமில்லை.
அவர்கள் ஏதாவது செய்திருந்தால் தானே சொல்ல முடியும். சட்டியில் இருந்தால் தானே அகப்பைக்கு வரும். வெறும் சட்டியை வைத்துக் கொண்டு திமுக 22 மாத ஆட்சியை ஓட்டிவிட்டது. செங்கல்லை தூக்கி பிடித்துக் கொண்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பாருங்கள் பாருங்கள் என பிரச்சாரம் செய்கின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு கொண்டு வந்த திட்டங்கள் குறித்து எங்களால் பட்டியலிட முடியும். ஆனால் திமுக அரசு என்ன திட்டங்களை கொண்டு வந்தது என பட்டியலிட முடியுமா..??
இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தென்னரசு அவர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். அப்படி ஒரு திட்டத்தை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 22 மாத திமுக ஆட்சியில் கொண்டு வந்ததாக சொல்ல முடியுமா..?" என எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Edappadi Palaniswami criticized Minister Udayanidhi Stalin