#BREAKING:: "ஈரோடு கிழக்கு பார்முலா"... குறுக்கு வழியில் பெற்ற வெற்றி.. திமுகவுக்கு ஈபிஎஸ் கடும் கண்டனம்..!!
EPS condemns DMK unfair victory in Erode East byelections
ஈரோடு கிழக்க தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் "திமுக அரசு அமைந்த இந்த 22 மாத காலத்தில் விடியா திமுக ஆட்சி மக்கள் விரோத ஜனநாயக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை மக்கள் அனைவரும் அறிந்து இருக்கிறார்கள்.
அதே வகையான ஜனநாயக படுகொலையை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் திமுக அரங்கேற்றியது. "திருமங்கலம் பார்முலா" என்ற பெயரில் மக்கள் வாக்குகளை விலை பேசியதை போல "ஈரோடு கிழக்கு பார்முலா" என்ற ஒன்றை உருவாக்கி ஆடு மாடுகளை அடைத்து வைப்பது போல் வாக்காளர்களை அடைத்து வைத்து அருவருக்கத்தக்க ஜனநாயக படுகொலையை அரங்கேற்றி இருக்கிறது ஆளும் திமுக.
எதிர்க்கட்சியின் பரப்புரைகள் மக்கள் காதிலே விழாத அளவிற்கு அவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள். மக்களை அடைத்து வைத்தால் மக்கள் அடைக்கப்பட்டிருக்கின்ற இடத்திற்கே சென்று மக்களை சந்திப்பேன் என நான் எச்சரித்த பிறகு பேருந்துகளில் மக்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் புது பார்முலாவை அறிமுகப்படுத்தியது திமுக.
அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, உணவு, கொலுசு, குக்கர், தங்கக்காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் என இவை எல்லாவற்றையும் தாண்டி திமுகவின் மிரட்டல் அப்பாவி மக்களை பெரும் அளவில் அச்சுறுத்தியது. திமுகவின் மக்கள் அடைப்பு முகாம்கள் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பரவலாக முளைத்திருந்தன. அந்த இடத்திற்கு வர மறுத்த அப்பாவி மக்கள் திமுகவினரால் மிரட்டப்பட்டார்கள். இந்த மிரட்டலுக்கு பயந்து சொந்த மண்ணில் அகதிகளை போல் நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது.
வாக்காளர் பட்டியல் முறைகேடு, மக்களை அடைத்து வைத்தல், கட்டற்ற முறையில் பணம், மது, பரிசு பொருட்கள் விநியோகித்தல், மக்களை மிரட்டி அச்சமூட்டுதல், கடவுள் நம்பிக்கை கொண்ட மக்களை கோவில் முன்னால் நிறுத்தி எலுமிச்சம் பழத்தின் மீது சத்தியம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி வாக்கு கொள்ளை நடத்தல் என்று திமுக நடத்திய வரலாறு காணாத அட்டூழியங்களை அதிமுக வெளி கொண்டு வந்தும் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தேர்தல் வாக்குப்பதிவு முடிய ஒரு மணி நேரம் இருந்த பொழுது 5 மணிக்கு திமுக குண்டர்கள் அதிமுக கழக நிர்வாகிகளை தாக்கிய ரகளை செய்ய தொடங்கினர். இந்த காட்சிகள் ஊடகங்களில் ஒளிபரப்பாகியது. திமுக ஏற்கனவே திட்டமிட்டபடி கடைசி ஒரு மணி நேரத்தில் அதிகமான வாக்குப்பதிவு செய்துள்ளது மிகப் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.
இது போன்ற எல்லா அராஜக அத்துருமிகளையும் அரங்கேற்றி ஒரு அருவருக்கத்தக்க ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி அற்ப வெற்றியை வசப்படுத்தி இருக்கிறது ஆளும் திமுக. திமுகவின் வெற்றி ஜனநாயகத்தின் தோல்வி... தமிழ்நாட்டின் அரசியல் அறத்தின் தோல்வி..!! "அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாகும்" என்கிறது தமிழ். அறத்தையே அடைத்து தொழிலுக்கு அரசியல் பிழைகளை நிகழ்த்தியிருக்கும் திமுகவின் நாட்கள் எண்ணப்படுகின்றன.
திமுகவின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல், பொய் பிரச்சாரத்தால் குழம்பி போகாமல், திமுகவின் அச்சுறுத்தலுக்கு அடிப்படையாமல், ஜனநாயகம் காக்கும் போராட்டத்தில் அதிமுக கரங்களை வலுப்படுத்தியுள்ள மக்கள் அனைவருக்கும் எனது பேரன்பையும், வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
EPS condemns DMK unfair victory in Erode East byelections