அடக்குமுறையை கையாண்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்! திமுக அரசுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!
EPS condemns TNgovt for PR Pandian arrest
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு சேர வேண்டிய காவிரி பங்கு நீரை கர்நாடக அரசு திறந்து விட மறுப்பதால் அதனை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இன்று காலை திடீரென கையில் தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அந்த வழியாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செல்வதாலும், மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதாலும் காவல்துறையினர் அவரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.ஆனால் அவர் அங்கிருந்து செல்ல மறுத்ததால் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயற்சி இருக்க கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று சமூக கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
காவல்துறையினரின் இத்தகைய செயலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்ததோடு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்னெத்தும், தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும் இன்று சென்னை மெரினா சாலையில் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் திரு.பி.ஆர்.பாண்டியன் அவர்களின் மீது தாக்குதல் நடத்தியும் வலுக்கட்டாயப்படுத்தியும் கைது செய்திருக்கும் இந்த விடியா திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட செவிமடுக்க மறுக்கும் இந்த அரசு இருந்தென்ன இல்லை என்றால் என்ன? தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் மக்களுக்காகவே அர்ப்பணித்து வரும் விவசாயிகள் மீது அடக்குமுறையை கையாள்வதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள முடியாது என இந்த அரசை மீண்டும் ஒரு முறை கண்டிப்பதுடன், இனியும் விவசாய சங்கங்கள் மீது இத்தகைய அடக்குமுறையை கையாண்டால் இந்த அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன்"என பதிவிட்டுள்ளார்.
English Summary
EPS condemns TNgovt for PR Pandian arrest