தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் செயல்படவில்லை! தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு!
Eps said TamilNadu police and intelligence are not working
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் இன்று தமிழக ஆளுநர் அர்.என் ரவியை சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் காவல் துறையும் உளவுத்துறையும் செயல்படாத நிலையில் உள்ளதாக குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் பேசுகையில் "கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமுத்தூர் தனியார் பள்ளி 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார். அவர் இறந்தவுடன் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமதி பெற்றோர்கள் முறையாக மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் புகார் அளித்துள்ளனர். காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை.
இந்த சம்பவம் குறித்து கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு விசாரணையை ஆரம்பித்துள்ளனர் . இந்த கலவர சம்பவத்தில் திமுக அரசு சரியான நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் மக்கள் கொந்தளித்து இருக்க மாட்டார்கள் கலவரம் உண்டாகிறது. பள்ளியும் தீக்கிரை ஆக்கப்பட்டிருக்காது.
இதற்கு விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். அதேபோன்று தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது என்பதை பத்திரிக்கையின் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம்.
அண்டை மாநிலங்களிலிருந்து சர்வ சாதாரணமாக தமிழக முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. போதைப் பொருள் புழக்கத்தை திமுக அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாததால் இளைஞர்களும், மாணவர்களும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி சீரழிகின்றனர். திறமையற்ற ஒரு முதலமைச்சர் காவல்துறையை செயல்படுத்த விடாமல் தடுப்பதையும், உளவுத்துறை செயலிழந்துவிட்டதையும் மாநில ஆளுநர் ஆர்.என் ரவி இடத்தில் கோரிக்கை மனுவாக அளித்துள்ளோம்" என செய்தியாளர் சந்திப்பில் பழனிச்சாமி பேசினார்.
English Summary
Eps said TamilNadu police and intelligence are not working