கூட்டுறவு சங்கம் : ஆளுங்கட்சியினரின் சுயலாபத்திற்காக பதவி காலத்தை குறைப்பதா?! ஜிகே வாசன் கண்டனம்!
GK Vasan condmns tn Govt for Society Commity life time
தமிழக அரசு, கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தைக் குறைப்பது தொடர்பாக கொண்டுவந்திருக்கும் மசோதாவை உடனடியாக அமலுக்கு கொண்டுவராமல் அவர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகு செயல்படுத்தலாம் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (09-01-22) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு, கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தைக் குறைப்பது தொடர்பான சட்டத்திருத்த முன்வடிவை நிறைவேற்றியிருப்பது அரசியல் சுய இலாபத்திற்காக அமைந்துவிடக்கூடாது.
கடந்த 2018 ல் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தல் மூலம் வெற்றிபெற்றவர்களின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அவர்களின் பதவியை பறிக்கும் விதமாக கூட்டுறவு சங்கத்தேர்தல் ரத்து என்ற முடிவும் நியாயமில்லை.
அதாவது கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு ஆன செலவு, மக்கள் பணி ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பதவிக்காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும்.
ஆனால் அமலில் உள்ள கூட்டுறவு சங்க நிர்வாகத்திற்கான செயல்பாடுகள் தொடர்பான சட்டத்தின்படி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். அந்த காலவரம்பை 3 ஆண்டுகளாக குறைக்கின்ற வகையில் சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அதற்கு அரசு சொல்கின்ற காரணம் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை சீரமைக்க செயல்பாட்டுத்திறனை உயர்த்துவதற்காக எடுக்கப்பட்ட முடிவு. இந்த முடிவானது ஆளுகின்ற அரசுக்கு தான் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அதாவது இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருமானால் இப்பொழுது பதவியில் இருப்பவர்கள் விலகுவார்கள். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த சட்டத்தை உடனடியாக நிறைவேற்றினால் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக அமையும். அப்படி நிறைவேற்றினால் பதவி வகிப்பவர்கள் 5 ஆண்டுகால பணியை மேற்கொள்ளமுடியாமல் பாதியிலேயே பதவி விலக நேரிடும்.
குறிப்பாக தமிழக அரசு சரியான காரணம் இருந்து, கூட்டுறவு சங்கங்களை திறம்பட நிர்வகிக்க நினைத்தால் பதவியில் இருப்பவர்கள் 5 ஆண்டுகால பணியை முடித்த பிறகு, இப்போதைக்கு கொண்டுவந்திருக்கும் சட்டமுன்வடிவை நிறைவேற்றி நிர்வாகிகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்பதை செயல்படுத்தலாம்.
எனவே தமிழக அரசு கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் தொடர்பாக கொண்டுவந்திருக்கும் சட்டத்திருத்தை உடனடியாக செயல்படுத்தாமல் இப்போது பதவியில் இருக்கும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்த பிறகு செயல்படுத்தலாம் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என வாசன் தெரிவித்துள்ளார்.
English Summary
GK Vasan condmns tn Govt for Society Commity life time