வன்னியர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி.. அசத்தல் திட்டம்.! ஆனால் காலம் கடந்து போச்சு.!!
j poonkunram fb post for deputy cm post for vanniyar
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்தவர் பூங்குன்றம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவர் எதிலும் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்து வருகிறார். ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற பூங்குன்றம், அவ்வப்போது அதிமுகவின் நிலைமை குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது முகநூல் பக்கத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வன்னியர்களுக்கு துணை முதலமைச்சர் பதவியை அறிவித்திருந்தால், அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், காலம் எதைத் தீர்மானிக்கிறது என்பதைப் பொறுத்துதான் வெற்றியும், தோல்வியும். அறிவு இருக்கிறது என்பதால் நாம் எதிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைப்பது அனுபவமின்மையையே காட்டும். காலம் நமக்கு துணை இருந்தால் மட்டுமே வெற்றிக் கனியை பறிக்க முடியும்.
தேர்தலுக்கு முன்பு எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதிமுக ஆட்சியில் மெஜாரிட்டி சமுதாயமான முக்குலத்தோர், கவுண்டர் சமுதாயத்தினர் முதலமைச்சர் பதவியை அலங்கரித்துவிட்டனர். மற்றொரு பெரிய சமுதாயமான வன்னியர்களுக்கு முதலமைச்சர் பதவி தந்தால் அதிமுக இந்த முறையும் ஆட்சியை பிடித்திருக்குமோ! இட ஒதுக்கீடு அறிவித்ததற்கு பதிலாக துணை முதலமைச்சர் பதவியை வன்னியருக்கு அறிவித்திருந்தால் கழகம் வெற்றி பெற்றிருக்கும் என்பது என் கணிப்பு. வெற்றிக்குப் பிறகு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சொல்லி இருக்கலாம். மற்ற சூழல்களையும், முக்கிய நிர்வாகிகளையும் கணக்கிட்டுத்தான் இந்த யோசனை எனக்குத் தோன்றியது. நண்பர்களிடம் இது பற்றி விவாதித்தேன். அற்புதமான யோசனை என்றார்கள். பதிவு செய்ய நினைக்கும் போது தேர்தல் அறிவிக்கபட்டுவிட்டதால் இது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தவிர்த்துவிட்டேன். காலம் நம் பக்கம் இல்லை என்பதை மனம் அப்போதே எனக்கு உணர்த்தியது.
காலம் நமக்கு கை கொடுக்க வேண்டும். காலத்தின் கருவி தான் நாமே தவிர நமக்கு காலம் கருவி கிடையாது. காலம் நமக்கு வழிவிடும் போது வாய்ப்புகளை நழுவவிட்டுவிட்டு பின்னர் புலம்பித் திரிவதில் எந்த பிரயோஜனமில்லை. முடிவுகளை எடுக்கும் நேரத்தில் சரியாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்...
ஆளுமை கொண்ட தலைவர் ஒருவராக இருந்தால் சாதிகளுக்கு முக்கியத்துவம் குறைந்துவிடும், கழகம் பழைய நிலைக்கு திரும்பிவிடும் என்பது என் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.
English Summary
j poonkunram fb post for deputy cm post for vanniyar