போர்க்களமாக மாறிய காஞ்சிபுரம்! இபிஎஸ், டிடிவி அடுத்தடுத்து போட்ட டிவிட்! என்ன நடக்குது?!
Kanjipuram Samsung protest ADMK AMMK Side Condemn to DMK Govt
அடிப்படை உரிமைகளுக்காக போராடும் சாம்சங் நிறுவன ஊழியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கைக்கு, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் காட்சிகள் கடுமையாக கண்டித்து உள்ளது.
இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள கண்டன செய்தியில், "காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளளர்-நிறுவனம்-அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், அரசு தரப்பில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வழங்கப்பட, தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து நான் நாள்விடாது சுட்டிக்காட்டி வருகிறேன். அத்தகு குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் விடியா திமுக அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்?
போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுகொண்டு, "நானும் தொழிலாளி" என்று மேடையில் மட்டும் முழங்கும் முக ஸ்டாலின் அவர்களுக்கு சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள கணடன செய்தியில், "அடிப்படை உரிமைகளுக்காக போராடும் சாம்சங் நிறுவன ஊழியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது- தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமையான தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுப்பதாக கூறி நான்கு வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தொழிலாளர்களின் சட்டப்பூர்வமான உரிமைகளில் ஒன்றான தொழிற்சங்கத்தை அமைக்கும் முடிவுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய தமிழக அரசு, தொடக்கம் முதலே சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருவதும், போராட்டத்தை ஒடுக்க முயற்சிப்பதும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் பிரதிநிதிகளை இரவு நேரத்தில் வீடு தேடிச் சென்று கைது செய்வதும், போராட்டத்தில் பங்கேற்கச் செல்லும் தொழிலாளர்களை கைது செய்ய பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்வதும் தான் தொழிலாளர் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சியா ? என தொழிலாளர்களே சரமாரியான கேள்விகளை எழுப்புகின்றனர்.
எனவே, காவல் துறையால் கைது செய்யப்பட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரடியாக தலையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Kanjipuram Samsung protest ADMK AMMK Side Condemn to DMK Govt