அடுத்த 48 மணி நேரத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கும்.. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அறிவிப்பு..!!
Karnataka New cabinet will take office in next 48 hours
கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் 135 இடங்களை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சியில் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி கடந்த நான்கு நாட்களாக நிலவி வருகிறது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே சிவகுமாருக்கும் இடையே நேரடி போட்டியின் நிலவி வந்தது.
நேற்று காலை டெல்லி புறப்படுவதற்கு முன்பு பெங்களூரு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே சிவகுமார் "காங்கிரஸ் எம்எல்ஏக்களை நான் உடைக்க விரும்பவில்லை. யார் முதுகிலும் நான் குத்த மாட்டேன்" என பேசி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி சென்று அடைந்த டி.கே சிவகுமார் நேற்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார். அதேபோன்று முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் மல்லிகார்ஜுன் கார்கேவை சந்தித்து பேசி இருந்தார். இந்த நிலையில் இன்று சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் மூலம் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா "கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும். கர்நாடக மாநில முதல்வர் குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பாஜகவினர் பரப்பும் வதந்திகளின் அடிப்படையிலோ, யூகத்தின் அடிப்படையிலோ செய்திகளை வெளியிட வேண்டாம்.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சர் அறிவிப்பு வெளியாகி அமைச்சரவை பதவி ஏற்கும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இருப்பினும் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் பெங்களூர் நகர் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Karnataka New cabinet will take office in next 48 hours