காங்கிரஸ் கட்சியினா் ஒருமித்த கருத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் - கே.எஸ்.அழகிரி!
K.s. azhagiri say about congress party should work together with consensus
நேற்று காங்கிரஸ் சார்பில் ஈரோட்டில் நடந்த மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியினா் ஒருமித்த கருத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, வரும் 7-ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து நடைப்பயணத்தை துவங்குகிறாா். இதற்கான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது.
அப்போது, பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்ததாவது,
"ராகுல் காந்தி வரும் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைப்பயணத்தை தொடங்குகிறார். மக்களுக்கு எது நன்மையோ, அதையே காங்கிரஸ் செய்யும். காங்கிரஸ் செய்த நன்மைகள், பாஜக செய்த தீமைகள் குறித்து காங்கிரஸ் கட்சியினா் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டிலும் மக்களாலும், தலைவா்களாலும் பாராட்டப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது விவசாயிகளின் நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். இந்திரா காந்தி இந்தியாவில் உணவுப் பஞ்சத்தை அகற்றி, தன்னிறைவு பெற பசுமைப் புரட்சியை செயல்படுத்தினாா். காங்கிரஸ் காலத்தில்தான் விவசாயம், தொழில் துறை மற்றும் பொருளாதாரம் மேலோங்கி இருந்தது.
இதனால் தான் தற்போது இந்தியா சிதறாமல் இருக்க காங்கிரஸால் மட்டுமே முடியும் என மக்கள் நம்புகின்றனா். காங்கிரஸ் போன்ற இயக்கம் இல்லாததால்தான் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் சிதறுண்டன. தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆட்சிக்கு ஏன் வர முடியவில்லை என்பதை சிந்திக்க வேண்டும்.
இது குறித்து மூத்த தலைவா்கள் விவாதித்து, நல்ல கட்டுப்பாட்டை உருவாக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினா் ஒருமித்த கருத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக நம்மிடம் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும்". என்று தெரிவித்தார்.
English Summary
K.s. azhagiri say about congress party should work together with consensus