மயிலாடுதுறை இரட்டை கொலை: ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? அண்ணாமலை, டிடிவி தினகரன் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராய வியாபாரிகளால் இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறை சோதனையின் போது கள்ளச்சாராயம் சிக்கியதை தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட ராஜ்குமார், தங்கதுரை மற்றும் மூவேந்தன் ஆகிய மூவரும், ஜாமீனில் வெளிவந்து தெருவில் சாராயம் விற்றுள்ளனர். 

இதை தட்டிக் கேட்ட சிறுவன் ஒருவனை ராஜ்குமார் தாக்க, அதற்காக அம்மூவரையும் கண்டித்த ஹரிஷ், ஹரிசக்தி ஆகிய 2 இளைஞர்களை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். 

இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இந்த இரட்டை கொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்? இன்று சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் உயிர் போயிருக்கிறதே. உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?

துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே? தமிழ்த் திரையுலகம் உங்கள் கைகளில்தானே இருக்கிறது.

தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. உங்கள் கையாலாகாத்தனத்தால், அமைதியான பொதுமக்களை, மிக மிக மோசமான எதிர்விளைவுகளுக்குத் தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

இதேபோல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்கள் என அனைத்து வகையிலான குற்றச் சம்பவங்களில் கைதாகும் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தராததும், ஜாமினில் வெளியே வருவோரை கண்காணிக்கத் தவறியதுமே இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் அரங்கேற முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சாராய விற்பனையை தட்டிக் கேட்பவர்கள், மணல் திருட்டை தடுத்து நிறுத்துவோர், மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படும் அளவிற்கான பதட்டமான சூழலை வாடிக்கையாக்கிய திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, இளைஞர்களை படுகொலை செய்த சாராய வியாபாரிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தருவதோடு, இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்களை இனியாவது தொடர்ந்து கண்காணித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
TTV Dhinakaran AMMK Murder DMK TN Govt  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Liquor Mayiladuthurai Murder DMK Govt TTV BJP Annamalai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->