எல்லாம் போச்சு! புள்ளி விவரத்துடன் திமுக கூட்டணி கட்சி எம்பி போட்ட டிவிட்!
Madurai Floods TNGovt CPIM MP
மதுரையில் பெய்த கடும் மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைப் பொருட்களை இழந்து பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ள குடும்பத்திற்கு இழப்பீடாக குறைந்தபட்சம் ரூபாய் 25,000 வழங்க வேண்டுமென தமிழக அரசை மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மதுரையில் இந்த அக்டோபர் மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மதுரை நகரைப் பொறுத்தவரை, கடந்த 1955 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி 115 மிமீ மழை பதிவாகியுள்ளது.
அதன் பின்னர் தற்போது 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அக்டோபர் மாதத்தில் 100 மிமீ-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, கடந்த அக்டோபர் 13ஆம் தேதி மதுரையில் ஒரே நாளில் 110 மிமீ வரை மழை பதிவாகியிருந்தது. 1955ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே அதிகப்பட்ச மழையாகும்.
அக்டோபர் 12ஆம் தேதி காலை 8.30 மணி தொடங்கி 13ஆம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மதுரையில் 16 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியது. இந்த 16 செ.மீ. மழையில், குறிப்பாக, 12 ஆம் தேதி இரவு 10 மணி முதல் 13ஆம் தேதி அதிகாலை 3.30 மணி வரையிலான 5.30 மணிநேரத்தில் மட்டும் 13 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியது.
அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 3 மணி முதல் 3.15 வரையிலான 15 நிமிடத்தில் 4.5cm மழைப்பொழிவு பதிவாகியது . காலை 8.30-மாலை 5.30 இடைப்பட்ட 9மணி நேரத்தில் 9.8cm மழை பொழிந்துள்ளது.
புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தால் குறுகிய காலத்தில் அதிகப்படியான பெருமழை பொழியும் என அறிவியலாளர்கள் கூறிவருவதற்கான எடுத்துக்காட்டாகும் இந்த நிகழ்வு.
இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தரவுகளின்படி, வடகிழக்குப் பருவமழை காலமான இந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் மதுரையில் மட்டும் பதிவான சராசரி மழையின் அளவு 308.6 மி.மீ. ஆகும். ஆனால், இதே காலத்தில் வழக்கமாகப் பதிவாகும் மழையின் அளவு 149.4 மி.மீ. மட்டுமே. ஆகவே, அக்டோபர் மாதத்தின் முதல் 27 நாட்களில் மட்டும் மழைப்பொழிவு இயல்பைவிட 107% அதிகமாகப் பதிவாகியுள்ளது.
ஏற்கெனவே மதுரையில் தென்மேற்குப் பருவ மழை வழக்கத்தைவிட 93 % அதிகமாகப் பெய்துள்ளது . வடகிழக்குப் பருவமழை காலத்தில் இயல்பைவிட அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சிப் பகுதியில் அம்ருத் - குடிநீர் பணி, வடிகால், பாதாளச் சாக்கடை பணி மற்றும் சாலை பணிகள் இரண்டு முக்கிய மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால் மதுரை மக்கள் கடும் இடர்பாடுகளைச் சந்தித்தனர் . பெருமழையின் காரணமாக மதுரை மாநகர வடக்குப் பகுதியில் ஏராளமான வீடுகளுக்குள் எதிர்பாராத மழைவெள்ளம் புகுந்து எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைப் பொருட்களை இழந்துள்ளனர்.
பருவமழை காலத்து இடர்களைப் போக்க அரசு நிர்வாகம் முழுமையாகவும், ஆற்றலோடும் செயல்பட அனைத்துவித முயற்சிகளையும் உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிக அவசியம் . மேலும் தற்போது உடைமைகளை இழந்து, பொருளாதார மற்றும் வருவாய் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் குறித்த முழுமையான கணக்கெடுப்பினை மாநில அரசு நடத்திட வேண்டும். பண்டிக்கைக் காலம் உள்ளிட்ட சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் இழப்பீடாக குறைந்தபட்சம் ரூபாய் 25,000 வழங்க வேண்டும்" என தமிழக அரசினை கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
Madurai Floods TNGovt CPIM MP