மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை!...மீட்பு நடவடிக்கைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!
Madurai whitewashed by heavy rains udhayanidhi stalin advice on rescue measures
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது தீவிரமடைந்து வருகிறது. தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த வகையில், மதுரையில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது.
நேற்று மதியம் 3 மணிக்கு பிறகு மட்டும் 8.செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் மதுரையில் உள்ள சில வீடுகள் மற்றும் தெருக்கள் என மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. சில பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்தில், மதுரையில் கனமழை பெய்து வருவதையொட்டி, காணொலி காட்சி மூலம், அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்களுடன் மழை பாதிப்பு குறித்தும், மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Madurai whitewashed by heavy rains udhayanidhi stalin advice on rescue measures