நொண்டி, கூன், குருடு! திமுக அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் - மாற்றுத் திறனாளிகள் சங்கம் கண்டனம்!
Matru Thirnalikal Condemn to DMK Minister Duraimurugan
மாற்றுத் திறனாளிகளை அவமரியாதையாக பேசிய அமைச்சா் துரைமுருகன் மன்னிப்புக் கோர வேண்டும் என்று, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்த அச்சங்கத்தின் அறிக்கையில், "கட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் துரைமுருகன், எதிா்க் கட்சிகளை நொண்டி, கூன், குருடு என விமா்சித்துள்ளாா். மூத்த அமைச்சரான அவரது இந்தப் பேச்சு, மாற்றுத் திறனாளிகளை பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கியது.
யாரும் எந்த வகையிலும் ஊனம் கிடையாது என்பதை உணா்த்தும் வகையில், ஊனமுற்றோா் நலத் துறையின் பெயரையே மாற்றுத் திறனாளிகள் நலத் துறை என மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி மாற்றினாா்.
மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையை தன் வசமே அவா் வைத்து இருந்தாா். அவரது வழியில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையை தானே நிா்வகித்து வருகிறாா்.
இந்த நிலையில், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், அமைச்சருமான துரைமுருகன், மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் கேலியாக பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு, அவா் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Matru Thirnalikal Condemn to DMK Minister Duraimurugan