என்எல்சி பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணி விவகாரம் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!
MKStalin Letter to PMModi for NLA job in GATE
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு GATE மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முடிவினை மாற்றிட வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ( NLC India Ltd ) 300 பட்டதாரி நிருவாகப் பயிற்சியாளர்களை ( Graduate Executive Trainee ) GATE தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்திட உத்தேசித்துள்ளதாகவும், இது கடந்த காலங்களில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையிலிருந்து மாறுபட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், கடந்த காலங்களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்க நடவடிக்கைகளுக்காக நிலங்களை வழங்கியவர்களின் குடும்பத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு , பட்டதாரி நிருவாகப் பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது முன்னுரிமை வழங்கப்பட்டு வந்துள்ளதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
என்.எல்.சி. -யின் சுரங்க நடவடிக்கைகளுக்கு நிலம் கணிசமான அளவிற்குத் தேவைப்படும் சூழ்நிலை உள்ளதைக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், அவ்வாறு தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால், நிலங்களை வழங்கும் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்ற நியாயமான கோரிக்கை உள்ளூர் மக்களிடையே எழுந்துள்ளதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி, இதனைக் கருத்தில் கொண்டு, என்.எல்.சி. நிறுவன சுரங்கப் பணிகளுக்காக நிலம் மற்றும் வீட்டுமனைகளை வழங்கியவர்களுக்கு, பட்டதாரி நிருவாகப் பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், என்.எல்.சி. நிறுவனத்தில் தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள பணி நியமனமானது GATE மதிப்பெண்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்ற திடீர் அறிவிப்பு, GATE தேர்வை எழுதாத உள்ளூர் விண்ணப்பதாரர்களை பாதிப்படையச் செய்வதோடு, அவர்களுக்கான வாய்ப்பைப் பறிப்பதாக அமையும் என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பட்டதாரி நிருவாகப் பயிற்சியாளர் பணிக்கு GATE மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முடிவினை மாற்றிட வேண்டுமென்றும், தற்போதைய பணியிடங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின்போது, என்.எல்.சி. நிறுவனம் தகுதித் தேர்வை நடத்திட வேண்டுமென்றும், அவ்வாறு பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது, என்.எல்.சி. நிறுவனத்திற்காக நிலங்களை வழங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்ய வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து உரிய அறிவுரைகளை ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டுமெனவும் பிரதமரை முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
MKStalin Letter to PMModi for NLA job in GATE