இந்தியாவையே காக்க போகும் I.N.D.I.A கூட்டணி! முதல்வர் மு.க ஸ்டாலின் பெருமிதம்!
MKStalin said that India alliance to save India
எதிரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
இந்த கூட்டத்தில் பேசிய அவர் "இந்தியா கூட்டணி என்பது இந்தியா முழுமைக்குமான கூட்டணி என்பதால் கூட்டணிக்கான ஒருங்கிணைப்பையும், குறைந்தபட்ச செயல் திட்டத்தையும் உடனடியாக உருவாக்க வேண்டும்.
இந்த கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவும், அடுத்த ஆண்டு இந்தியாவுக்கான ஒளிமயமான ஆண்டாக அமையவும் எனது வாழ்த்துக்கள். இந்தியாவை காக்க போகும் இந்த இந்தியா கூட்டணியானது கடந்த 3 மாதங்களாக மிகுந்த ஒற்றுமையுடன் கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறது.
ஒரு கட்சி ஆட்சி முடிந்து, மற்ற கட்சி ஆட்சி என்பதாக இல்லாமல் எதேச்சாதிகார ஆட்சி முடிந்து, மக்களாட்சி மலர தேவையான கொள்கை மூலமாக மக்களிடையே நாம் நம்பிக்கை அடையாளப்படுத்த வேண்டும்.
இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன்பு நிச்சயமாக பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியா கூட்டணியின் பலத்தை விட இந்தியா என்ற வார்த்தையே பயத்தையும், காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது. இந்த பயத்தால் தான் பாஜகவினர் நமது கூட்டணியை கொச்சைப்படுத்தி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணையமாட்டார்கள் ஒரே கூட்டத்தில் பிரிந்து விடுவார்கள் என பாஜக நினைத்தது. ஆனால் கூட்டணியாக இணைந்து, பெயரும் சூட்டி அதற்கான 3வது ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளோம் என்பதே நமது உறுதியை காட்டுகிறது" என பெருமிதமாக பேசி உள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலினை தொடர்ந்து மற்ற தலைவர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
English Summary
MKStalin said that India alliance to save India