20 மாதம் சம்பளம் தராத மத்திய அரசு! சீமான் கடும் கண்டனம்!
NTK Seeman Condemn to Central Govt
தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் யோகா ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 20 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முழுவதுமுள்ள 1300 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது பணியாற்றி வரும், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற யோக ஆசிரியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக யோகா மற்றும் நேச்சுரோபதி ( BNYS) படித்துள்ள ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தமிழக ஆயூஸ் மையம் (STATE AYUSH SOICIETY) கடந்த 07.02.2025 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது, ஏற்கனவே பணியாற்றி வரும் யோகா ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை நசிக்கின்ற கொடுஞ்செயலாகும். இப்புதிய பணி நியமனத்திற்கு, பல இலட்ச ரூபாய் லஞ்சம் பெற்று, கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்திய ஒன்றிய அரசின் விதிமுறைகளின்படி, ஆரம்ப சுகாதார நிலைய யோகா ஆசிரியர் பணியிடத்திற்கு, யோகா படிப்பில் பட்டம் அல்லது பட்டயம் அல்லது 12 ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதுமானது என்று வரையறுத்துள்ள நிலையில், அத்தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
யாரை மகிழ்விக்க இந்த அறிவிப்பு? யாருடைய லாபத்திற்காக இப்பணி நீக்க உத்தரவு? யோகா ஆசிரியர்களைப் பணி நீக்கம் செய்து, அவர்களது குடும்பத்தை வீதியில் நிறுத்துவது சிறிதும் நியாயமற்ற கொடுஞ்செயலாகும். இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? என்ற கேள்விகள் எழுகிறது.
ஆகவே, தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது பணியாற்றும் யோகா ஆசிரியர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்யும் முடிவைக் கைவிட்டு, அவர்களுக்கு வழங்க வேண்டிய 20 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்" என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
NTK Seeman Condemn to Central Govt