பரபரப்பில் மதுரை: இது திமுக அரசின் அரசப் பயங்கரவாதம் - கொந்தளிக்கும் சீமான்!
NTK Seeman Condemn to DMK Govt MK Stalin tamilnadu Airport
மதுரை வானூர்தி நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முன் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றித்தரக்கோரி அறவழியில் போராடும் மக்களை அச்சுறுத்தி அடக்குவது அரசப் பயங்கரவாதம் என்று, தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மதுரை வானூர்தி நிலைய விரிவாக்கத்திற்காக அருகிலுள்ள சின்ன உடைப்பு கிராமத்திலிருந்து மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி வலுகட்டாயமாக நிலங்களை அபகரிக்கும் திமுக அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
மதுரை நகருக்குள்ளேயே மீள் குடியேற்றம் செய்ய வேண்டும், 3 சென்ட் நிலம் தரவேண்டும், இடிக்கும் வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற அம்மக்களின் மிக நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றித்தராமல், திமுக அரசு வலுக்கட்டாயமாக நிலங்களைப் பறிப்பதென்பது கொடுங்கோன்மையாகும்.
சின்ன உடைப்பு கிராம மக்கள் வானூர்தி நிலைய விரிவாக்கத்திற்கு நிலங்களைத் தர முடியாது என்று கூறவில்லையே? தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றுதானே போராடுகின்றனர். அதைக்கூட திமுக அரசால் நிறைவேற்றித்தர முடியாதா?
மக்களின் நியாயமான தொடர் கோரிக்கையினை மதிக்காமல் மதுரை வானூர்தி நிலைய விரிவாக்க ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியதைக் கண்டித்து அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் அடிப்படையில் அறவழியில் போராடும் சின்ன உடைப்பு கிராம மக்கள் மீது வழக்குப் பதிவு, கைது நடவடிக்கை என்று அடக்குமுறைகளை ஏவி, அச்சுறுத்துவது அப்பட்டமான எதேச்சதிகாரமாகும்.
மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரான அழிவுத் திட்டங்களை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடையக் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?
இதுதான் ‘எல்லார்க்கும் எல்லாம்’ கிடைக்கச் செய்கின்ற சமூக நீதியா?
நிலங்களை வழங்க மறுக்கும் மக்களை மிரட்டி அச்சுறுத்துவதும், வெளியில் வரமுடியாதபடி திமுக அரசு காவல்துறையைக் கொண்டு அடைத்து வைப்பதும், சிறிதும் மனச்சான்று இன்றி கைது செய்து சிறைப்படுத்த முனைவதும் நியாயம்தானா?
பரந்தூர் மக்கள் மீது இதேபோன்ற அடக்குமுறைகளை ஏவிவரும் திமுக அரசு, தற்போது மதுரை சின்ன உடைப்பு கிராம மக்களையும் அடக்கி ஒடுக்குவதென்பது அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும்.
எனவே, உடனடியாக காவல்துறையினரை அப்பகுதிகளில் இருந்து விலகச் செய்வதோடு உரிய நியாயங்களோடுப் போராடும் மதுரை சின்ன உடைப்பு கிராம மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும் " என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
NTK Seeman Condemn to DMK Govt MK Stalin tamilnadu Airport