ஒரே நாடு ஒரே தேர்தல் - கூட்டாட்சி முறைக்கு எதிரானது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு!
One Nation One Election CM MK stalin Statement
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்று, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு நடைமுறைக்குச் சாத்தியமற்றதும், இந்தியாவின் பரந்துபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களைக் கவனத்தில் கொள்ளாததும், கூட்டாட்சியியலைச் சிதைப்பதும் ஆகும்.
வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடப்பது, அந்தந்த மாநிலத்துக்குரிய பிரச்சினைகள், ஆட்சி முன்னுரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாதது.
யதார்த்தத்துக்கு முரணாக அனைத்து மாநில அரசுகளின் ஆட்சிக்காலத்தையும் ஒரே வரிசையில் கொண்டு வருவது என்பது இயல்பாக நடக்கும் அரசு நிர்வாகத்துக்கு இடைஞ்சலை உருவாக்கும்.
இந்த முன்மொழிவு என்பதே மொத்தத்தில் பாஜகவின் ஆணவத்தைத் திருப்திப்படுத்துவதற்கான நகர்வுதானே ஒழிய, இதனை ஒருபோதும் அவர்களால் நடைமுறைப்படுத்த இயலாது. இந்திய ஜனநாயகம் ஒற்றைக் கட்சியின் பேராசைக்கு ஏதுவாக வளைக்கப்படலாகாது.
ஒன்றிய அரசானது இத்தகைய திசைதிருப்பல் உத்திகளில் தனது ஆற்றலை வீணடிப்பதை விட்டுவிட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களைச் சமமாக பகிர்ந்தளித்தல் ஆகிய முக்கியமான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும்." என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
One Nation One Election CM MK stalin Statement