முதல்வர் ஸ்டாலினே ஹிந்தியை தான் வளர்த்து வருகிறார் - ஓபிஎஸ் காட்டமான விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "தமிழ் மொழியை வளர்ப்பது என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும்,குறிப்பாக பிறமொழி பேசுபவர்களை தமிழ்க் கற்றுக் கொள்ள வழிவகை செய்வது, பிற மாநிலங்களில் உள்ள மக்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பது, தமிழுக்கான இருக்கைகளை தோற்றுவிப்பது, உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை தோற்றுவிப்பது போன்றவை ஆகும். 

ஆனால், தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய முதலமைச்சர் அதைச் செய்யாமல், தன்னை வளர்த்துக் கொள்ளும் பணியில், தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் பணியில், இந்தி மொழியை வளர்த்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியத் தலைவராக பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக வட மாநிலங்களில் அவர் புகழ் பரவ வேண்டும் என்பதற்காகவும் சில நடவடிக்கைகள் திமுகவால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் முதல் கட்டமாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு செய்தி - மக்கள் தொடர்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டு தொல்லியல் துறை இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இந்தி மொழியில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றும் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டை வேடம் போடுகிறது திமுக தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு பேரறிஞர் அண்ணா கூறிய இருமொழிக் கொள்கையில் ஒன்றான ஆங்கிலத்தை பயன்படுத்துவதற்குப் பதில் ஏன் மும்மொழிக் கொள்கையில் ஒன்றான இந்தியை திமுக தலைவர் பயன்படுத்துகிறார் என்று மக்கள் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒருவேளை ஊருக்கு தான் உபதேசம் போலும்.

திமுக அரசின் இந்த இரட்டை வேடத்திற்கு அனைத்திந்திய அதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவின் இந்தச் செயலைப் பார்க்கும்போது, "பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி, பாமர மக்களை வலையினில் மாட்டி, இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே" என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகள் தான் என் நினைவிற்கு வருகின்றன.

திமுகவின் செயல்பாடுகளைக் கண்டு மக்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த ஏமாற்றம், வருங்காலத்தில் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி, அதிமுக ஆட்சியில் அமர வழிவகுக்கும்"

இவ்வாறு அந்த அறிக்கையில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops say about cm stalin hindi issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->