இயக்குனர் மோகனை அரைகுறை புரிதலுடன் கைது செய்வதா? டாக்டர் இராமதாஸ் கடும் கண்டனம்!
PMK Dr Ramadoss Condemn to TNPolice for Mohan G Arrest
திரைப்பட இயக்குனர் மோகனை அரைகுறை புரிதலுடன் கைது செய்வதா? உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோயில் ஒன்றின் பஞ்சாமிர்தம் குறித்து யு-டியூப் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு நேர்காணல் அளித்ததற்காக திரைப்பட இயக்குனர் ஜி.மோகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரைகுறை புரிதலுடன் திருச்சி மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
இயக்குனர் மோகன் அளித்த நேர்காணலை பார்த்தவர்களுக்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரியும். யு-டியூப் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த நேர்காணலில்,’’ புகழ்பெற்ற கோயில் ஒன்று தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக்குறைவு மாத்திரைகள் கலக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த பஞ்சாமிர்தம் தரமற்றது என்று கூறி அழிக்கப்பட்டதாகவும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதனால் தான் நான் இதை செய்தியாளர் சந்திப்பைக் கூட்டி தெரிவிக்கவில்லை. காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகக் கூட இவ்வாறு கூறப்பட்டிருக்கலாம். அரசும், அதிகாரிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தான் கூறியிருக்கிறார்.
இயக்குனர் மோகன் கூறியதில் எந்த தவறும் இல்லை. பொது நலன் கருதி கூறியதை முழுமையாக புரிந்து கொள்ளாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக வார்த்தைகளை புரிந்து கொண்டு மோகனை கைது செய்திருப்பது அநீதி. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Dr Ramadoss Condemn to TNPolice for Mohan G Arrest