பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா குறித்து ஆளுநர் கூறியதை திரும்ப பெற வேண்டும் - பரபரப்பு அறிக்கை.!
PFI say about governor speech
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழகத் தலைவர் முஹம்மது சேக் அன்சாரி இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியின் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என.ரவி, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் மோசமான இயக்கம் என்றும், பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு பின்புலமாக செயல்பட்டு வருபவர்கள் என்றும் கூறியுள்ளார். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நம் நாட்டில் பல முகமூடிகளை அணிந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆளுநர், தீய நோக்கத்துடன் ஆர்எஸ்எஸ்-இன் ஊழியர் போன்று, ஆளுநரின் மரபுக்கு எதிராக பேசியுள்ளதை பாப்புலர் ஃப்ரன்ட் வன்மையாக கண்டிக்கின்றது. இவரின் இக்கருத்தானது, ஆர்எஸ்எஸ்-இன் குரலாகத்தான் ஒலித்துள்ளது. தமிழகத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்படவிருந்த போதிலிருந்தே ஆளுநர் ரவியின் மீது பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்ததை நாம் மறந்து விடக்கூடாது. அதனைத் தொடர்ந்து ஆளுநரை திரும்பப் பெறவேண்டும் என்று ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்ப்புக்குரல் எழுப்பக்கூடிய அளவில் தான் இவருடைய செயல்பாடுகள் இருக்கிறது.
மேலும், திமுக அரசு ஒரு வருட ஆட்சியை பூர்த்தி செய்யும் நிலையில், மத அடிப்படையில் துவேசத்தை உண்டாக்கிடும் செயல்பாடுகளை ஆளுநர் முன்னிறுத்தி மடங்களுக்கு செல்வதும், மதப்பிளவுகளை ஏற்படுத்தும் விதமாக கருத்துகளை கூறுவதும் என தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்படுவதை காட்டுகின்றது.
இச்சூழ்நிலையில் பாப்புலர் ஃப்ரன்டுக்கு எதிராக ஆளுநர் பேசியிருக்கும் இந்தக் கருத்து என்பது ஆளுநர் மீதான ஒட்டுமொத்த குற்றச்சாட்டையும், சர்ச்சையையும் திசை திருப்பிவிடும் ஒரு செயலாகத்தான் பார்க்க முடிகின்றது. இது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மேற்கொள்ளும் உத்தி என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு ஜனநாயக ரீதியாக கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தி முன்னணியில் நின்று செயல்படக் கூடிய ஒரு அமைப்பு ஆகும்.
சமூக ஜனநாயக களங்களில் வீரியமாக செயல்பட்டும், பாசிச பாஜகவின் மக்கள் விரோத திட்டங்களுக்கும், கொள்கைகளுக்கும் எதிராக தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றது. அதேபோல் தன்னலம் பாராமல் மக்களுடைய தேவைகளை முன்னிறுத்தி செயல்படுகின்றது. கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் , தேசம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறந்த நபர்களின் உடல்களை சாதி, மதங்கள் கடந்து நல்லடக்கம் செய்தது. பாப்புலர் ஃப்ரன்ட்டின் சேவைக்கு பிறகுதான் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் இப்பணியை செய்தனர்.
அதே போல், தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்றதிலிருந்து கூட்டாட்சிக்கு எதிராக செயல்பட்டபோது அவருக்கு எதிராக பாப்புலர் ஃப்ரன்ட் குரலெழுப்பியது, தமிழக பல்கலைக்கழகங்களில் இனி துணைவேந்தர்களை தமிழக அரசு நியமிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்து நிறைவேற்றப்பட்ட மசோதாவை பாப்புலர் ஃப்ரன்ட் வரவேற்றது. அதேபோல் மாநில சுயாட்சி பறிக்கப்படும்போதும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளது.
எனவே, அரசு பொறுப்பில் இருக்கக்கூடிய ஆளுநர் ஓர் நிகழ்ச்சியில் சம்மந்தமில்லாமல் பாப்புலர் ஃப்ரன்டை பற்றி பேசியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. தேசம் முழுவதும் ராம்நவமியின் பெயரால் சங்பரிவாரக்கூட்டங்கள் கலவரங்களை ஏற்படுத்தி வந்த நிலையில், அதற்கு எதிராக யாரும் போராடாத சூழ்நிலையில் பாப்புலர் ஃப்ரன்ட் மட்டும் தேசம் முழுவதும் பாஜக அரசுக்கு எதிராக வீரியமான போராட்டங்களை முன்னெடுத்த தருணத்தில் ஆளுநர் இதனை பேசியருப்பதின் மூலம் ஆர்எஸ்எஸ்-இன் அஜாண்டாவை முன்மொழிந்தது போல் இருக்கிறது.
மேலும், மாநில சுயாட்சிக்கும் மக்கள் இயக்கங்களுக்கும் எதிராக செயல்பட்டுவரும் ஆளுநரின் போக்கினை கண்டித்து பாப்புலர் ஃப்ரன்ட் போராட்டங்களை முன்னெடுக்கும். ஜனநாயக சக்திகள் ஆளுநரின் செயல்பாட்டை கண்டித்து ஓரணியில் இணைந்து குரல் எழுப்ப முன்வர வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரன்ட் கேட்டுக்கொள்கின்றது. ஆளுநர் ரவி பாப்புலர் ஃப்ரண்டுக்கு எதிராக கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரன்ட் கேட்டுக் கொள்கின்றது”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
PFI say about governor speech