இதெல்லாம் அநியாயம்! கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிய 674 பேர்! குரல் கொடுக்கும் அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin Fire Workers issue
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 674 தீயணைப்பு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை அவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படவில்லை.
நீண்ட நடைமுறைகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளித்து, பணியில் சேர்க்காமல் மனித வளத்தை வீணடிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழக காவல்துறைக்கு இரண்டாம் நிலைக் காவலர்கள் 2599 பேர், சிறைத்துறைக் காவலர்கள் 86 பேர், தீயணைப்பு வீரர்கள் 674 பேர் என மொத்தம் 3359 பேரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது. போட்டித் தேர்வு , உடற்தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைத்துறைக் காவலர்கள் ஆகியோர் பயிற்சிக்கு அனுப்பப்பட்டு விட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் மட்டும் இன்னும் பயிற்சிக்கு அனுப்பப்படவில்லை. தீயணைப்பு துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் இன்னும் பயிற்சிக்கு அனுப்பப்படாததால் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். பணி நியமன ஆணை பெற்றும் கூட தங்களுக்கு வேலை உண்டா, இல்லையா? என்ற ஐயத்தில் வாடிக்கொண்டிருக்கின்றனர். வேலைக்கான ஊதியம் கிடைக்காததால் அவர்களின் குடும்பங்களும் அவதிப்படுகின்றன.
தீயணைப்பு துறையில் பல்லாயிரக்கணக்கான காலியிடங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக நிரப்பாமல், காலியிடங்களில் ஒரு பகுதியை மட்டும் நிரப்பும் நோக்குடன் தான் 2023-ஆம் ஆண்டில் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின் ஆள்தேர்வு நடைமுறைக்காக ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து விட்டன. இத்தகைய சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தீயவிப்பு வீரர்களையும் பணியில் ஈடுபடுத்தாமல் இருந்தால் தீயணைப்பு துறை ஆள் பற்றாக்குறையால் முடங்கிவிடக் கூடும்.
கோடைக்காலம் தொடங்கி விட்ட நிலையில், தீயணைப்புத் துறையின் பணிச்சுமை அதிகரிக்கும். தீ விபத்துகள் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்க தீயணைப்பு வீரர்கள் அதிகம் தேவை. அதைக் கருத்தில் கொண்டு, தீயணைப்புத் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 674 வீரர்களையும் உடனடியாக பயிற்சிக்கு அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin Fire Workers issue