காமராஜர் பெயரை நீக்கி கருணாநிதி பெயரை சூட்டுவதா? அன்புமணி இராமதாஸ் விடுத்த கடும் எச்சரிக்கை!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin Karunanithi Statue
திருத்தணி காய்கறி சந்தைக்கு காமராஜர் பெயரை நீக்கி விட்டு கலைஞரின் பெயரைச் சூட்ட தமிழக முடிவு செய்துள்ள நிலையில், இதற்கு பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "திருத்தணியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு பெருந்தலைவர் காமராசரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு தேசிய அளவில் அடையாளமும், பெருமையும் தேடித்தந்த காமராசரின் பெயரை இருட்டடிப்பு செய்ய திமுக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.
திருத்தணி ம.பொ.சி.சாலையில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு அங்குள்ள வணிகர்களின் கோரிக்கைப்படி ரூ.3.02 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. காலம் காலமாக காமராசர் சந்தை என்று அறியப்பட்ட அந்த சந்தைக்கு இப்போது , 'கலைஞர் நுாற்றாண்டு காய்கறி அங்காடி' என பெயர் மாற்றம் செய்ய திருத்தணி நகராட்சி தீர்மானித்திருக்கிறது.
திருத்தணி நகராட்சியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காய்கறி சந்தைக்கு காமராசரின் பெயரே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அங்குள்ள பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். ஆனால், அதையும் மீறி கலைஞர் நுாற்றாண்டு காய்கறி அங்காடி' என்ற பெயரில் சந்தையை திறப்பதற்கான முயற்சிகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. இது எந்த வகையிலும் நியாயமல்ல.
தமிழ்நாடு கண்ட தலை சிறந்த அரசியல் தலைவர்களில் காமராசர் குறிப்பிடத்தக்கவர். கலைஞராலும் அவர் மதித்துப் போற்றப்பட்டவர். அப்படிப்பட்டவரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞரின் பெயரை வலிந்து திணிக்க முயல்வது ஏற்புடையதல்ல. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் கலைஞருக்கு புகழ் சேர்க்க முடியாது. மாறாக, நடுநிலையாளர்களின் வெறுப்புக்குத் தான் ஆளாக நேரிடும் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
அதற்கும் மேலாக, ஓர் அரசியல் தலைவரின் பெயரை நீக்கி விட்டு, இன்னொரு தலைவரின் பெயரைச் சூட்டுவது அரசியல் நாகரிகமல்ல. அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வரும் போது பல கட்டிடங்களுக்கும், திட்டங்களுக்கும் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் பெயரை நீக்கி விட்டு வேறு தலைவரின் பெயர் சூட்டப்பட்டால் அப்போது இன்றைய ஆட்சியாளர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அதே உணர்வுடன் திருத்தணி சந்தைக்கு சூட்டப்பட்டுள்ள காமராசரின் பெயரை மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
திருத்தணி சந்தைக்கு காமராசரின் பெயர் மாற்றப்படுவதைக் கண்டித்து முதல் போர்க்குரல் காங்கிரஸ் கட்சியிடமிருந்து வந்திருக்க வேண்டும். ஆனால், திமுகவின் அங்கமாகவே மாறி விட்டதாலோ என்னவோ இது குறித்து அந்தக் கட்சி வாயைக் கூட திறக்கவில்லை.
திருத்தணி சந்தைக்கு காமராசரின் பெயரே நீடிக்க வேண்டும்; அவர் பெயரை நீக்கி விட்டு கலைஞர் பெயரைச் சூட்டும் முயற்சியை பா.ம.க. அனுமதிக்காது. தமிழக அரசு அதன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அதைக் கண்டித்து தொடர் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்" என்று அன்புமணி இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin Karunanithi Statue