வாயை விட்டு வசமாக சிக்கிய CM ஸ்டாலின்! வெள்ளை அறிக்கை கோரும் அன்புமணி இராமதாஸ்!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நிறைவேற்றப்பட்ட  வாக்குறுதிகளின்  எண்ணிக்கை தொடர்பாக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்.

சென்னையில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர், இதுவரை 90 விழுக்காட்டுக்கும், அதாவது  450க்கும் கூடுதலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக தெரிவித்திருக்கிறார்.

இதுவரை 10% வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படாத நிலையில், 90%க்கும் கூடுதலான  வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக கூறுவது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும் என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழ்நாட்டில்  கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.  திமுக ஆட்சிக்கு வந்து  நான்கு ஆண்டுகள் நிறைவடைவிருக்கும் நிலையில்,  இதுவரை அதிகபட்சமாக 50 வாக்குறுதிகள், அதாவது 10% வாக்குறுதிகள் கூட  நிறைவேற்றப்படவில்லை.  

ஆனால்,  திமுகவின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றபட்டு விட்டதாகவும், இனி நிறைவேற்றுவதற்கு வாக்குறுதிகளே இல்லை என்பது போலவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

கடந்த வாரம் நடைபெற்ற  நிகழ்ச்சி ஒன்றில் இதுவரை  389 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு  விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருந்தார்.  

ஆனால்,  அவ்வளவு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால் உண்மை நிலையை மக்களுக்கு விளக்க நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியிருந்தது.  

ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட வில்லை. ஆனால், முன்னுக்குப் பின் முரணாக பேசியிருக்கிறார். கடந்த ஆண்டில் 99% வாக்குறுதிகள்  நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறிய முதலமைச்சர், அதன்பின் கடந்த வாரம் 389 வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டு விட்டதாகக் கூறினார்.

இப்போது 90% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறுகிறார்.  அப்படியானால், ஒரே வாரத்தில் 61 வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கு நிறைவேற்றினார்? எப்படி நிறைவேற்றினார்? என்பது விந்தையாக இருக்கிறது.

திமுக அளித்த வாக்குறுதிகளில் முதன்மையானவை  ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை, 50 லட்சம் பேருக்கு தனியார் வேலை வழங்கப்படும்; மின்சாரக் கட்டணம் மாதத்திற்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும்;  சமையல் எரிவாயுவுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்;  தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கப்படும்;

கல்விக்கடன் ரத்து செய்யப்படும்; ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி வேலைவழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும்; நீட் தேர்வு ரத்து செய்யப்படும்; சட்டப்பேரவை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்தப்படும்; அவை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படும் ஆகியவை தான். இவற்றில் ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை.

திமுக அரசு உண்மையாகவே 90% வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அதைக் கொண்டாட தமிழ்நாட்டு மக்கள் தயாராக உள்ளனர்.

ஆனால், அதற்கு முன் 2021 தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன? என்பதை ஆதாரங்களுடன்  தமிழக அரசு நிரூபிக்க வேண்டும். அவற்றை அறிந்து கொள்வது மக்களின் உரிமை.

எனவே, கடந்த நான்காண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin manifesto


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->