இப்படியே போனா எப்படி? ஏழை மக்கள் மீது சுமையை ஏற்றாதிங்க! தமிழக அரசின் அலட்சியத்தை அம்பலப்படுத்தும் அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைக்கப்பட்ட வடசென்னை அதி உய்ய அனல் மின்நிலையம் &- 3, அதன்பின் 6 மாதங்களாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. 

மக்களவைத் தேர்தலுக்கு முன் அவசர, அவசரமாக திறக்கப்பட்ட அனல் மின்நிலையத்தில் நிலக்கரியை பயன்படுத்துவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட செய்யப்படாதது தான் வடசென்னை அதி உய்ய அனல் மின்நிலையம்-3 திறக்கப்பட்டும் நீண்ட நாளாகியும் முடங்கிக் கிடப்பதற்கு காரணம் என்று, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவரின் அறிக்கையில், ஓர் அனல் மின்நிலையம் செயல்படுவதற்கான அடிப்படைத் தேவை அதற்கான எரிபொருள். நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் தான் குறைந்த செலவில் மின்சாரத்தைத் தயாரிக்க முடியும். அதைக் கருத்தில் கொண்டு தான் அதி உய்ய நிலை வெப்ப தொழில்நுட்பத்துடன் இந்த அனல் மின் நிலையம் உருவாக்கப்பட்டது. பிற அனல் மின் நிலையங்களை ஒப்பிடும்போது இது 6% வரை அதிக திறன் மிக்கது; அதனால் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய 0.45 கிலோ நிலக்கரி மட்டுமே தேவைப்படுவதால் ஒரு யூனிட்டுக்கான உற்பத்திச் செலவு ரூ. 6 ஆக இருக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், வடசென்னை அனல்மின் நிலையம் - 3 தொடங்கப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், நிலக்கரியை கையாள்வதற்கான தளம், நிலக்கரியை மின்நிலையத்திற்கு கொண்டு வருவதற்கான கன்வேயர் பெல்ட், எரிக்கப்பட்ட நிலக்கரியின் சாம்பல் வெளியில் பரவாமல் தடுப்பதற்கான சேமிப்புக்குளம் கட்டப்படவில்லை. அதனால், நிலக்கரியை பயன்படுத்துவதற்கு பதிலாக திரவ எரிபொருளை பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. அதனால், ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.13 செலவாகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஒரு மின்நிலையம் தொடர்ந்து 3 நாட்களுக்காவது அதன் முழுத் திறனில் இயங்கினால் தான் அது செயல்பாட்டுக்கு வந்ததாக பொருள் ஆகும். ஆனால், 800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல்மின் நிலையம் &- 3 இன்று வரை ஒருமுறை கூட அதன் முழுத்திறனை அடையவில்லை. அதனால், அது இன்னும் செயல்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப் படவில்லை.

வடசென்னை அனல்மின் நிலையம் - 3 அதன் முழுத்திறனை அடைந்திருந்தால், இதுவரை 600 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கும். ஆனால், இதுவரை வெறும் 68 கோடி யூனிட், அதாவது 11% அளவுக்குத் தான் மின்சாரம் உற்பத்தி செய்திருப்பதாக அதிகாரிகளை காரணம் காட்டி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த அனல் மின்நிலையத்திற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்டதை விட இரு மடங்குக்கும் கூடுதலாக செலவிடப்பட்டு விட்ட நிலையில், நிலக்கரி சேமிப்புக் குளம், நிலக்கரி கையாளும் தளம், கன்வேயர் பெல்ட் உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க ரூ.50 கோடி தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டால் கூட, வரும் கோடைக்குள்: அனல் மின்நிலையத்தின் உற்பத்தித் திறனில் 70% மட்டுமே எட்ட முடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மின்நிலையங்களை அமைப்பதில் அரசு எவ்வளவு அலட்சியம் காட்டுகிறது என்பதற்கு இதுவே சான்று.

மின்திட்டங்களை செயல்படுத்துவதில் மிக மோசமான மாநிலம் தமிழ்நாடு என்பதற்கு சான்றாக திகழ்வது வடசென்னை அனல்மின் நிலையம்&-3 தான். இந்த மின் நிலையத்திற்கான அறிவிப்பு 2010ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞரால் வெளியிடப்பட்டது. ஆனால், அதைத் தவிர வேறு எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை. 2012ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் ஆய்வுக்கான பணி வரம்புகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இறுதி செய்தது. அப்போது இந்த திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.4,800 கோடி என்றும், 2017ஆம் ஆண்டு திசம்பரில் பணிகள் முடிந்து மின்னுற்பத்தித் தொடங்கும் என்றும் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. 

ஆனால், கட்டுமானப் பணிகளே 2016 இல் தான் தொடங்கின. அதனால், திட்ட மதிப்பு ரூ.1576 கோடி அதிகரித்து, 6,376 கோடியாக உயர்ந்தது. அதுமட்டுமின்றி, பணிகள் முடிந்து 2019&20ஆம் ஆண்டில் மின்னுற்பத்தித் தொடங்கும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக அதிமுக ஆட்சி முடியும் வரை பணிகள் முடிக்கப்படவில்லை. திமுக ஆட்சியிலும் மிகவும் தாமதமாகத் தான் பணிகள் நடைபெற்றன. பணிகள் முழுமை அடையாத நிலையிலேயே தேர்தலுக்காக கடந்த மார்ச் 7&ஆம் நாள் வடசென்னை அனல் மின் நிலையம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

அப்போது மின் நிலையத்திற்கான திட்டச் செலவு ரூ.10,158 கோடியாக உயர்ந்தது. இன்னும் குறைந்தது ரூ.100 கோடியாவது இந்த ஆலைக்காக செலவிட வேண்டியிருக்கும். அதனால், வட சென்னை மூன்றாவது அனல் மின்நிலையத்திற்கான மொத்த மதிப்பு, அதன் தொடக்ககால மதிப்பீட்டில் 213 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. இது நினைத்துப் பார்க்க முடியாத உயர்வு ஆகும்.

தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய சராசரியாக ரூ.3 - 4 மட்டுமே செலவாகிறது. ஆனால், வடசென்னை அனல்மின்நிலையத்தின் திட்ட மதிப்பீடு இரு மடங்கிற்கும் மேலாகி விட்டதால், அதில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ரூ.6க்கும் கூடுதலாக செலவாகிறது. இவ்வாறாக மின்னுற்பத்தி நிலையங்களின் கட்டுமானத்தை திட்டமிட்டு தாமதப்படுத்துதல், அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குதல் ஆகியவற்றால் தான் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது. மின்வாரியத்தின் மொத்த இழப்பு ரூ.2 லட்சம் கோடியை நெருங்கும் நிலையிலும் தமிழக அரசும், மின்சார வாரியமும் மாறாமல், அதே அலட்சியத்துடனும், ஊழலுக்கு இடம் கொடுக்கும் வகையிலும் செயல்பட்டால் மின்சார வாரியம் இப்போதைக்கு லாபம் ஈட்ட முடியாது. மின்சாரக் கட்டண உயர்வு என்ற பெயரில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தான் சுமைகள் சுமத்தப்படும்.

எனவே, தமிழக அரசும், மின்சார வாரியமும் நிலுவையில் உள்ள மின்திட்டங்களை இனியாவது இலக்கு வைத்து நிறைவேற்ற வேண்டும்; தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும். அதன் மூலம் தமிழ்நாடு மின்வாரியத்தை இலாபத்தில் இயக்க வேண்டும் என்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss condemn to TN Govt for Electricity board


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->