அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான மோதல்! மதிப்பில்லாத பட்டங்களுடன் துயரப்படும் மாணவர்கள் - டாக்டர் இராமதாஸ் கடும் கண்டனம்!
PMK Ramadoss Condemn to DMK Govt Governor RN Ravi
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு கடந்த 30 மாதங்களாக புதிய துணைவேந்தர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. இதேநிலை தொடர்ந்தால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் 85% பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை உருவாகி விடும். ஆளுனருக்கும், அரசுக்கும் இடையிலான மோதல் தான் இதற்குக் காரணம் எனும் நிலையில் அதற்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 8 பல்கலைக் கழகங்களும் துணைவேந்தர்கள் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன. இவற்றில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 30 மாதங்களாகவும், கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2022 நவம்பர் மாதம் முதல் 29 மாதங்களாகவும் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன.
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ஏப்ரல் மாதத்தில் முடிவுக்கு வருகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் வரும் மே 19&ஆம் தேதி நிறைவடைகிறது. வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதுவரை புதிய துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தால் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்கள், அதாவது 85% பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தடுமாறும் அவல நிலை உருவாகிவிடும்.
துணைவேந்தர்கள் இல்லாததால் பல்கலைக்கழகங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் நிலையான பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், நிதி அலுவலர்களும் இல்லாததால் அவை முடங்கிக் கிடக்கின்றன. பல்கலைக்கழகங்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர்கள் இல்லாமல் பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை. சில பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டாலும் துணைவேந்தர்களின் கையெழுத்து இல்லாமல் வழங்கப்பட்டுள்ள பட்டச் சான்றுகளுக்கு மதிப்பில்லை என்பதால் மாணவர்களின் வேலைவாய்ப்புத் தகுதி பாதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழங்கள் எதிர்கொண்டு வரும் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்..... பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடர்பாக அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான மோதல் தான். ஆளுனருக்கும், அரசுக்கும் இடையிலான மோதலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. பல்கலைக்கழகங்கள் முடங்கி விடக்கூடாது. இந்த சிக்கலுக்கு சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும்.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு, ஏற்கனவே ஆளுனருக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் தொடர்பான வழக்குகளுடன் இணைத்து உச்சநீதிமன்றத்தில் வேகமாக விசாரிக்கப்பட்டாலும் கடந்த ஒரு மாதமாக அந்த வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இடைக்காலத் தீர்ப்பைப் பெறுவது அல்லது வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளின் மூலம் அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வந்து காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Ramadoss Condemn to DMK Govt Governor RN Ravi