மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் மரணம்; இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர்..!
Manoj Bharathiraja dies of a heart attack Chief Minister expresses condolences
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் இன்று மாரடைப்பால் காலமானார். 48 வயதான அவர் பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகன் ஆவார். இவர்,1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து அவர் சமுத்திரம், கடல்பூக்கள், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், ஈர நிலம், மகா நடிகன், அன்னக்கொடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2022-ஆம் ஆண்டு விருமன் என்ற படத்தில் நடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
உதவி இயக்குநராகவும் பணியாற்றிய இவர் நந்தனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில், இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழி திங்கள் என்ற படத்தை மனோஜ் இயக்கியிருந்தார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மனோஜ் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ்.

இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Manoj Bharathiraja dies of a heart attack Chief Minister expresses condolences