உயர்நீதிமன்ற கண்டனத்திற்கு தமிழக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும் - டாக்டர் இராமதாஸ்!
PMK Ramadoss Condemn to DMK Govt MK Stalin
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில் தமிழக அரசு தோல்வி என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருப்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் தமிழக அரசும், மதுவிலக்குப் பிரிவும் என்ன செய்து கொண்டிருந்தன? இந்த விவகாரத்தில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள வினா மிகவும் முக்கியமானது; இந்த வினாவுக்கு நேர்மையாக பதிலளிக்காமல் தமிழக அரசு தப்பித்து விட முடியாது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நச்சு சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்தது தொடர்பாக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட 18 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது அரசுத் தரப்பில் நேர் நின்ற வழக்கறிஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 18 பேரும் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக கூறினார். அதைக் கேட்ட நீதிபதிகள், பல ஆண்டுகளாக அவர்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்கள் என்றால், அவர்களை கட்டுப்படுத்தாமல் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது? என வினா எழுப்பினார்கள்.
கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்ததற்கு அப்பகுதியில் எந்த வித தடையும் இல்லாமல் கள்ளச்சாராயம் ஆறாக ஓடியதும், கள்ளச்சாராய வணிகர்களுக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆதரவு அளித்ததும் தான் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வந்தது. பா.ம.க.வின் குற்றச்சாட்டு உண்மை என்பதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து உறுதி செய்திருக்கிறது.
கள்ளச்சாராய சாவுகள் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த நவம்பர் 20-ஆம் நாள் தீர்ப்பளித்த நீதிபதிகள்,’’கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் கவனத்திற்கு வராமல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது; கள்ளச்சாராய விற்பனையை தமிழக காவல்துறை கண்டும் காணாமலும் இருந்ததைத் தான் இது காட்டுகிறது; கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு திரும்பப் பெற்றது தவறு’’ என்றெல்லாம் கண்டனக் கணைகளை தொடுத்தார்கள்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நாளுக்கு நாள் அம்பலமாகி வருகிறது. இதற்காக தமிழக அரசு தலைகுனிய வேண்டும். இனியாவது பொறுப்புடன் செயல்பட்டு தமிழ்நாட்டில் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் கூட விற்பனை செய்யப்படவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Ramadoss Condemn to DMK Govt MK Stalin