தருமபுரி இளைஞர் கொலை: சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் - டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


தருமபுரி: காட்டில் வனத்துறையினாரால் இளைஞர் கொடுமைப்படுத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கொங்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். கொத்தனாராக பணி செய்து வந்த செந்திலையும், அவரது தந்தை கோவிந்தராஜ், சகோதரர் சக்தி ஆகியோரை கடந்த மார்ச் 17-ம் தேதி பென்னாகரம் வனக்காவல் நிலையத்திற்கு வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அதன்பின் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாத நிலையில், அவர்களின் குடும்பத்தினர் இது குறித்து தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 19-ம் தேதி புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து சக்தியை அவரது குடும்பத்தினரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.

அதேநேரத்தில், ஏமனூர் வனப்பகுதியில் யானை ஒன்று கொல்லப்பட்டு, அதன் தந்தம் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், செந்திலை அவரது குடும்பத்தினரிடம் வனத்துறையினர் ஒப்படைக்கவில்லை. யானை கொல்லப்பட்ட இடத்தில் விசாரிப்பதற்காக கைவிலங்குடன் அழைத்துச் சென்ற போது அவர் தப்பி ஓடிவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

அதன்பின், 15 நாட்கள் கழித்து கொங்காரப்பட்டி வனப்பகுதியில் செந்திலின் உடல் கிடைத்ததாக வனத்துறையினர் கூறியுள்ளனர். அவர் வனத்துறையினரால் கொடுமைப்படுத்தி பின்னர், சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், வனத்துறையோ, தங்களின் பிடியிலிருந்து தப்பி ஓடிய செந்தில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக விளக்கமளித்திருக்கிறது. வனத்துறையினர் தெரிவித்திருக்கும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

செந்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நாள் முதல் நடந்த நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது அவர் வனத்துறையினரால் கொடுமைப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு நம்பும்படியாகவே உள்ளது. செந்திலின் மர்ம மரணம் குறித்து கீழ்க்கண்ட சந்தேகங்கள் எழுகின்றன.

விசாரணை என்ற பெயரில் செந்திலை மார்ச் 17-ம் தேதி அழைத்த வனத்துறையினர், அவர் குறித்த விவரங்களையோ, அவர் கைது செய்யப்பட்டதையோ 19-ம் தேதி வரை குடும்பத்தினருக்கு தெரிவிக்காதது ஏன்?

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கு அடுத்த நாளே, செந்திலை வனத்துறையினர் கொலை செய்து வனப்பகுதியில் வீசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 18-ம் தேதி முதல் செந்திலின் உடல் கண்டெடுக்கப்பட்ட ஏப்ரல் 4-ம் தேதி வரை கொங்காரப்பட்டி வனப்பகுதியில் எவரும் நுழையாமல் வனத்துறை தடுத்து நிறுத்தி வைத்திருந்தது இந்த ஐயத்தை உறுதி செய்கிறது. செந்திலின் உடல் அழுகிவிட்டால் அவர் கொடுமைப்படுத்தப்பட்டதை நிரூபிக்க முடியாது என்பதற்காகவே வனத்துறையினர் இவ்வாறு செய்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

செந்தில் தப்பி ஓடி தற்கொலை செய்து கொண்டிருந்தால், அவரது கை விரல்களின் நகங்கள் மாயமானது எப்படி? உடல் அழுகினாலும் நகங்கள் உதிராது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். வனத்துறையினர் சித்திரவதை செய்து செந்திலின் நகங்களை பிடுங்கியதாகக் கூறப்படுகிறது.

கைவிலங்குடன் தப்பி ஓடிய செந்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது கைகளில் விலங்கு இல்லாதது எப்படி?

வனத்துறை பிடியிலிருந்து காட்டுக்குள் விலங்குடன் தப்பி ஓடியதாக கூறப்பட்ட செந்திலின் கைகளில் துப்பாக்கி கிடைத்தது எப்படி?

இந்த வினாக்கள் எதற்கும் விடையளிக்க வனத்துறை மறுக்கிறது. இது தொடர்பாக காவல்துறையில் செந்திலின் மனைவி சித்ரா புகார் அளித்துள்ள போதிலும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

வனத்துறை அதிகாரிகள் குறித்த பல ரகசியங்கள் செந்திலுக்குத் தெரியும் என்றும், அவற்றை செந்தில் வெளியில் கூறி விடுவார் என்ற அச்சத்தில் தான் அவரை வனத்துறையினர் படுகொலை செய்து விட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுகின்றனர். வனத்துறையினரின் இந்த நாடகத்துக்கு தருமபுரி மாவட்ட காவல்துறையினரும் துணை போவதை மன்னிக்கவே முடியாது.

கடந்த 2020-ம் ஆண்டில் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் எவ்வாறு விசாரணை என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டார்களோ, அதேபோல் தான் செந்திலும் வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கை தமிழக காவல்துறையினர் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சாத்தான்குளம் காவல்நிலைய கொலை வழக்கைப் போலவே இந்த வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். கொல்லப்பட்ட செந்திலின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Ramadoss Condemn to DMK Govt MK Stalin Dharmapuri Young man death case CBI


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->