திமுக அரசு இழைக்கும் பெரும் துரோகம் ஆகும் - உச்சகட்ட கொந்தளிப்பில் டாக்டர் இராமதாஸ்!
PMK Ramadoss Condemn to DMk Govt MkStalin Farmers issue
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்கள் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் செய்யப்படாது என்றும், அந்த மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும் அதிகாரம் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு திமுக அரசு இழைக்கும் பெரும் துரோகம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் மூலம் நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதாகவும், அதை ஏற்று காவிரி பாசன மாவட்டங்கள் தவிர மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் செய்யும் உரிமையை மத்திய அரசுக்கு தமிழக அரசு தாரைவார்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் செய்யப்படும் உரிமை மத்திய அரசு நிறுவனமான தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்கப்பட்டால், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்புகள் ஏற்படும். முதலில் தமிழ்நாட்டில் நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்கான கட்டமைப்புகள் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்துக்கு கிடையாது. அதனால் தனியார் வணிகர்களையும், இடைத்தரகர்களையும் கொண்டு தான் அந்த அமைப்பு நெல்லை கொள்முதல் செய்ய முடியும். அந்த முறையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை முழுமையாக கொள்முதல் செய்ய முடியாது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமாக தமிழ்நாடு முழுவதும் 3148 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், அவற்றின் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து வைக்க 18.08 லட்சம் அன் கொள்ளளவு கொண்ட 367 கிடங்குகளும் உள்ளன. ஆனாலும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் விளையும் 120 லட்சம் டன் நெல்லில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே கொள்முதல் செய்ய முடிகிறது.
அதிலும் கூட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க போதிய வசதிகள் இல்லாததால் மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நனைவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை 5000 ஆகவும், கிடங்குகளின் எண்ணிக்கையை 500 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாரியத்திடம் இந்த அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் இருக்கும் போதே, மூன்றில் ஒரு பங்கு நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும் நிலையில், எந்த கட்டமைப்பு வசதியும் இல்லாத மத்திய அரசின் தேசிய நுகர்வோர் இணையத்தால் எந்த அளவுக்கு நெல்லை கொள்முதல் செய்ய முடியும்? அந்த அமைப்பால் போதிய அளவு நெல்லை கொள்முதல் செய்ய முடியாத சூழலில், மீதமுள்ள நெல்லை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் விவசாயிகள் தனியாருக்கு மிகக்குறைந்த விலைக்கே விற்பனை செய்ய வேண்டி வரும். இதைத் தான் தமிழக அரசு விரும்புகிறதா?
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக குவிண்டாலுக்கு ரூ.130 வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசு நிறுவனத்தால் நெல் கொள்முதல் செய்யப்படும் போது இந்த ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு கிடைக்காது. இது விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
நெல் கொள்முதலைப் பொறுத்தவரை நாடு முழுவதும் விளையும் நெல்லை மத்திய அரசு தான் கொள்முதல் செய்கிறது. மத்திய அரசுக்கு நெல் கொள்முதல் செய்யும் முகவராகவே தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகம் செயல்பட்டு வருகிறது. தாங்களே நேரடியாக நெல்லை கொள்முதல் செய்வதாக மத்திய அரசு கூறும் பட்சத்தில் தமிழக அரசு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களைக் காப்பதற்காக மாற்று வழிகள் ஏராளமாக இருக்கும் நிலையில் அவற்றை பயன்படுத்தாமல் மத்திய அரசிடம் தமிழக அரசு சரண் அடைந்திருக்கக் கூடாது.
மத்திய அரசு கேட்டுக் கொள்ளும் பட்சத்தில், மத்திய அரசுக்கு நெல் கொள்முதல் செய்து தரும் பணியிலிருந்து தான் தமிழக அரசு விலக வேண்டியிருக்குமே தவிர, தமிழக அரசு அதன் சொந்தப் பொறுப்பில் நெல் கொள்முதல் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லை சந்தைப் படுத்துவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் விவசாயிகளுக்கு இன்னும் கூடுதலாக கொள்முதல் விலை வழங்க முடியும்.
காவிரி பாசன மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் செய்வதிலிருந்து விலகிக் கொள்ளும்படி மத்திய அரசு கட்டாயப்படுத்தி இருந்தால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்திருக்க வேண்டும். அதை விடுத்து மாநில அரசின் உரிமைகளையும்,விவசாயிகளின் நலன்களையும் மத்திய அரசிடம் தாரை வார்த்திருக்கக் கூடாது.
மாநில அரசுகளின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும் போது விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைப்பதால், அதை சிதைக்கும் வகையில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் வாயிலாக நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு முயலக் கூடாது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பிலேயே நெல் கொள்முதல் செய்யப்படுவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
அதை செய்ய மத்திய அரசு முன்வரவில்லை என்றால், தமிழக அரசே அதன் சொந்த நிதியில் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியவாறு, வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற புதிய பொதுத்துறை நிறுவனத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும்” என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Ramadoss Condemn to DMk Govt MkStalin Farmers issue