தமிழக அரசின் அலட்சியம்! 18 பேர் தற்கொலை - மருத்துவர் இராமதாஸ் கடும் கண்டனம்!
PMK Ramadoss Condemn to MDK Govt MK STalin Online rummy
தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 18 பேர் தற்கொலை செய்து கொண்டு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "நாகர்கோயில் தீயவிப்பு நிலையத்தில் தீயவிப்பு வீரராக பணியாற்றி வந்த, நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் ரூ.17 லட்சத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஆரல்வாய்மொழி அருகே தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கருப்பசாமியை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருப்பசாமி பல ஆண்டுகளாகவே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி இருந்தார். இதுவரை அவர் 17 லட்சத்தை இழந்துள்ளார். அதில் பெரும்பாலான தொகை மற்றவர்களிடமிருந்து கடனாக வாங்கப்பட்டதாகும். ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து விலக அவர் பலமுறை முயன்றும் அவரால் முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மி எப்படியெல்லாம் மற்றவர்களை அடிமையாக்கும் என்பதற்கு கருப்பசாமி தான் மோசமான எடுத்துக்காட்டு ஆவார்.
கருப்பசாமி தற்கொலை செய்து கொண்டதால், அவருடைய மனைவியும், குழந்தையும் ஆதரவற்றவர்களாகியுள்ளனர். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாதது தான் காரணமாகும்.
பா.ம.க. நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது. ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது.
தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த 2023 ஆண்டு நவம்பர் 10-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த திசம்பர் மாதம் வரை 17 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நடப்பாண்டில் முதல் தற்கொலை கருப்பசாமி ஆவார்.
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை. ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து பல குடும்பங்கள் வீதிக்கு வருவதைத் தடுப்பதும், தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதும் தான் அரசின் பணியாக இருக்க வேண்டும். ஆனால், அந்தக் கடமையை செய்ய தமிழக அரசு தவறி விட்டது.
தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 18 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Ramadoss Condemn to MDK Govt MK STalin Online rummy