தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை சிதம்பரம் வருகை.!
governor rn ravi going to chithambaram
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 135-வது பிறந்த நாள் விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சிதம்பரத்துக்கு வருகை தரும் அவர் காலை 11.10 மணியளவில் சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் உள்ள நந்தனார் மடத்திற்கு செல்கிறார். அங்குள்ள சுவாமி சகஜானந்தா நினைவிடம் மற்றும் அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்துகிறார்.
அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெறும் சுவாமி சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த விழாவில் திருக்கோஷ்டியூர் உ.வே.ஸ்ரீ மாதவன் சுவாமி, சிதம்பரம் அணி வணிகர் எஸ்.ஆர்.ராமநாதன், அர்ச்சனா ஈஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து ஆளுநர் ரவி மதியம் 12.50 மணிக்கு சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடிவிட்டு அவர்களுடன் உணவருந்த உள்ளார்.
ஆளுநர் ரவி சிதம்பரம் வருவதை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில் சிதம்பரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
English Summary
governor rn ravi going to chithambaram