ஹெல்மெட் சட்டத்தை தள்ளி வையுங்கள்..அதிமுக முன்னாள் MLA வலியுறுத்தல்!
Put aside the helmet law Ex AIADMK MLA urges
புதுச்சேரி காவல்துறை ஹெல்மெட் அணிவதன் விழிப்புணர்வை அதிகப்படுத்தி பண்டிகை காலங்களுக்கு பின்னர் ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: புதுவை மாநிலத்தில் தற்போது தலை கவசம் கட்டாயம் என்று அரசின் முறையான அறிவிப்பு இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் புதுவை மக்களிடையே ஒரு பதற்றமான சூழல் இப்போது நிலவுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை கட்டாய தலை கவசம் என்ற அறிவிக்கப் படுவதும் உடனடியாக மக்கள் ஹெல்மெட் கடைகளை தேடி அலைந்து அடித்து பிடித்து ஹெல்மெட் வாங்கி வைப்பதும்
சில தினங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் இல்லை என்ற வாய்மொழி அறிவிப்பு வந்தவுடன் அந்த அறிவிப்பு காலாவதி ஆவதும் தொடர் கதையாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே ஹெல்மெட் அணிவது என்ற சட்டம் இருந்து வருவதும் தினந்தோறும் குறைந்தபட்சம் 50 வழக்குகள் ஆவது ஹெல்மெட் அணியவில்லை என்று அபராதம் இன்று வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பெங்கல் புயல் பாதிப்பில் இருந்து புதுச்சேரி மாநில மக்கள் இப்போது வரை மீண்டு வராத நிலையில் அவர்களுக்கு புதிய செலவாக இந்த ஹெல்மெட் வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
மேலும் எதிர்வரும் காலம் அனைத்தும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களாகும். தமிழகத்தின் நமது புதுச்சேரியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்து புதுச்சேரியை நோக்கி மக்கள் வரக்கூடிய சூழலில் இந்த ஹெல்மெட் சட்டம் கடலூர்,விழுப்புரம் பகுதி மக்களின் வருகையை பாதிக்கும். இதனால் புதுச்சேரி மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாய் பாதிப்பு ஏற்படும் சுழல் உள்ளது.
மேலும் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்படும் போதெல்லாம் ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்கள் ஹெல்மெட்டை அதிக விலைக்கு விற்பதும் கொள்ளை லாபம் அடிப்பதும் தொடர்கதையாகியுள்ளது. இதனால் இது போன்ற கட்டாய ஹெல்மெட் அறிவிப்புக்கு பின்னால் மிகப்பெரிய மர்மம் இருப்பதாக புதுச்சேரி மக்கள் நினைக்கின்றனர்.
எனவே புதுச்சேரி காவல்துறை ஹெல்மெட் அணிவதன் விழிப்புணர்வை அதிகப்படுத்தி பண்டிகை காலங்களுக்கு பின்னர் ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
Put aside the helmet law Ex AIADMK MLA urges