#BREAKING : தமிழ்நாட்டை விட்டு வெளியேற ராஜேந்திர பாலாஜிக்கு அனுமதி மறுப்பு!
Rajendra Balaji denied permission to leave Tamil Nadu
அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக தாகரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் குற்றஞ்சாட்டினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த ஓசூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரக் காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் வெளியூர்களுக்கு எங்கும் செல்லக்கூடாது என்றும் நிபந்தனைகள் விதித்தனர்.
இந்த நிலையில் இது குறித்த வழக்கில் தமிழகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டை விட்டு வெளியேற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை எனவே நீண்ட காலம் வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு 45 நாட்களில் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
English Summary
Rajendra Balaji denied permission to leave Tamil Nadu