முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமை பறிபோகாமல் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமை பறிபோகாமல் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலுயுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காகச் செல்வதற்கு அனுமதி மறுக்கும் கேரள வனத்துறையின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமையைப் பறிக்க முயலும் கேரள அரசின் அதிகார அத்துமீறலை, தடுக்கத்தவறி கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் நிலவிய கடும் வறட்சியைப் போக்கவே 1895 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. விடுதலைக்குப் பிறகு எல்லைப் பிரிப்பின்போது முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி நிலப்பகுதியைக் கேரளாவிடம் தமிழ்நாடு இழந்தது. 

இருப்பினும் 1970 ஆம் ஆண்டு கேரளாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்ட புதிய ஒப்பந்தத்தின்படி முல்லைப் பெரியாறு அணைப்பகுதியின் நிலத்தையும், நீரையும் பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு ஆண்டும் நில வரிப்பணமாக ரூபாய் 2.5 இலட்சமும், மின்உற்பத்திக்கான உபரி வரிப்பணமாக ரூபாய் 7.5 இலட்சமும் கேரள அரசுக்கு, தமிழ்நாடு அரசு செலுத்திவருகிறது. 

அணையைப் பாதுகாத்துப் பராமரிக்கும் உரிமை தமிழ்நாடு அரசின் வசம் இருக்குமென்றும் முடிவு செய்யப்பட்டது. அணைப் பாதுகாப்பையும், தமிழ்நாடு அரசின் அணையைப் பாதுகாக்கும் உரிமையையும் உச்சநீதிமன்றமே உறுதி செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, கேரள மாநில அரசு முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்று பொய்ப்பரப்புரையில் ஈடுபடுவதும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியாதபடி தடுப்பதும் தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் நாள் தமிழ்நாடு அரசினையோ, தேனி மாவட்ட ஆட்சியரையோ, பொதுப்பணித்துறை அதிகாரிகளையோ, கலந்தாலோசிக்காமல் எவ்வித முன்னறிவிப்புமின்றி, கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மதகுகளைத் திறந்து அணை நீரினை வெளியேற்றினார்.

கேரள அரசின் ஒப்பந்த விதிமீறலையும், அதிகார அத்துமீறலையும் கண்டிக்கத் தவறிய திமுக அரசு, அப்படி ஒரு நிகழ்வே நடைபெறவில்லை என்று பூசி மொழுகியது. அவப்பெயருக்கு அஞ்சி, எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தும் திமுக அரசின் மெத்தனப் போக்கை வன்மையாகக் கண்டித்ததோடு, கடந்த ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் தேனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நாம் தமிழர் கட்சி நடத்தியது.

அதன் பிறகாவது, திமுக அரசு இப்பிரச்சினையை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்று சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால், அணை பாதுகாப்பிற்கான தளவாடப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அனுமதியளிக்க மறுக்கும் துணிவு கேரள அரசிற்கு வந்திருக்காது.

கடந்த பிப்ரவரி 25 ஆம் நாள் நடைபெற்ற முல்லைப் பெரியாறு அணை துணைக் கண்காணிப்புக் குழுவின் ஆய்வுக் கூட்டத்தை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் புறக்கணித்துள்ளதன் மூலமே கேரள அரசின் எதேச்சதிகாரப் போக்கு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முல்லைப் பெரியாற்றின் அணைப் பாதுகாப்புரிமை தமிழ்நாட்டிடமிருந்து பறிபோகக்கூடிய பேராபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இனியும் தமிழ்நாடு அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது.

ஆகவே, உச்சநீதிமன்ற தீர்ப்பினை சிறிதும் மதியாது முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் அதிகார அத்துமீறலில் ஈடுபடும் கேரள அரசின் ஆணவப் போக்கிற்கு எதிராக உடனடியாக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமெனவும், சமரசமற்ற சட்டப் போராட்டம் நடத்தி, முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்கும் உரிமை பறிபோகாமல் பாதுகாக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman say about mullai periyaru dam issue feb 27


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->