பட்டாசு தொழில் தொடர்ந்து நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வேண்டுகோள்..!
Steps should be taken to ensure that the firecracker industry continues to operate Selvapperundhagai appeals
பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். மேலும், பலர் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தகைய வெடிவிபத்து சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதும், அப்பாவித் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்கின்ற வகையில் பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன.
அதிகாரிகளின் உரிய கண்காணிப்பு இல்லாத நிலையில் தொழிற்சாலை ஒழுங்குமுறை நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்ற அலட்சியப் போக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணைகளின் இறுதியில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்பான முறையில் பட்டாசு தொழில் தொடர்ந்து நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.
பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணமும் அரசு செலவில் உயரிய சிகிச்சையும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்கள் விரையில் குணமடைய விழைகிறேன்.'' என்று செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Steps should be taken to ensure that the firecracker industry continues to operate Selvapperundhagai appeals