கல்விக்கொள்கையில் மொழி நிலைப்பாடு குறித்து எந்த மாற்றமும் இல்லை; திமுகவுக்கு பதிலளித்துள்ள பவன் கல்யாண்..!
There is no change in the language stance in the education policy Pawan Kalyan responds to DMK
'கல்விக்கொள்கை குறித்து தவறான தகவல்களைப் பரப்பி, மக்களை தவறாக வழி நடத்த முயல்கின்றனர்' என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
பவன் கல்யாண், 'இந்தியாவுக்கு பல மொழி தேவை. தமிழக அரசியல்வாதிகள் தேவையின்றி ஹிந்தியை எதிர்க்கின்றனர். தமிழ் படங்கள் டப்பிங் செய்து ஹிந்தியில் வெளியிட மட்டும் அனுமதிக்கின்றனர்' என்று கூறியிருந்தார். இதற்கு தி.மு.க., தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக எம்.பி., கனிமொழி, செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் ஆகியோர் பவன் கல்யாணை கடுமையாக விமர்சித்தனர்.

பவன் கல்யாண் அவர்கள் பா.ஜ.,வுடன் சேருவதற்கு முன் ஹிந்தியை எதிர்த்ததாகவும், பா.ஜ.,வுடன் சேர்ந்த பிறகு ஹிந்திக்கு ஆதரவாக பேசுவதாகவும், தி.மு.க., தரப்பில் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு பவன் கல்யாண் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பதிலளித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; ஒரு மொழியை வலுக்கட்டாயமாகத் திணிப்பதோ அல்லது ஒரு மொழியை குருட்டுத்தனமாக எதிர்ப்பதோ; இரண்டுமே நமது பாரதத்தின் தேசிய மற்றும் கலாசார ஒருங்கிணைப்பின் நோக்கத்தை அடைய உதவாது.
ஹிந்தி மொழியை ஒரு மொழியாக நான் ஒருபோதும் எதிர்த்ததில்லை. அதை கட்டாயமாக்குவதை மட்டுமே நான் எதிர்த்தேன். தேசிய கல்விக்கொள்கை- 2020 (என்.இ.பி2020) அதுவே ஹிந்தியை திணிக்காதபோது, அது குறித்து தவறான கதைகளைப் பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியைத் தவிர வேறில்லை.
தேசிய கல்விக்கொள்கை 2020ன் படி, மாணவர்கள் ஒரு வெளிநாட்டு மொழியுடன் எந்த இரண்டு இந்திய மொழிகளையும் (அவர்களின் தாய்மொழி உட்பட) கற்றுக்கொள்ள நெகிழ்வுத்தன்மை கொண்டுள்ளனர். அவர்கள் ஹிந்தி படிக்க விரும்பவில்லை என்றால், அவர்கள் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, அஸ்ஸாமி, காஷ்மீரி, ஒடியா, பெங்காலி, பஞ்சாபி, சிந்தி, போடோ, டோக்ரி, கொங்கணி, மைதிலி, மெய்தி, நேபாளி, சந்தாலி, உருது அல்லது வேறு எந்த இந்திய மொழியையும் தேர்வு செய்யலாம்.

பல மொழிக் கொள்கை மாணவர்களுக்கு விருப்பத்தேர்வை வழங்கவும், தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கவும், இந்தியாவின் வளமான மொழியியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை அரசியல் நோக்கங்களுக்காக தவறாகப் புரிந்துகொண்டு, பவன் கல்யாண் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகக் கூறுவது புரிதலின்மையையே பிரதிபலிக்கிறது.
ஜன சேனா கட்சி ஒவ்வொரு இந்தியருக்கும் மொழியியல் சுதந்திரம் மற்றும் கல்வித் தேர்வு என்ற கொள்கையில் உறுதியாக நிற்கிறது.' என்று பவன் கல்யாண் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
English Summary
There is no change in the language stance in the education policy Pawan Kalyan responds to DMK