திருமாவளவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! இந்து முன்னணி வலியுறுத்தல்!
Thiruma should be arrested under the National Security Act
நேற்று முன்தினம் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் திருமாவளவன் தனித்தமிழ்நாடு அடைவது தமிழ் தேசியத்தின் கொள்கை என பேசி இருந்தார். திருமாவளவனின் பேச்சிற்கு இந்து முன்னணி தலைவர் கடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது "விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இந்து மதத்திற்கு எதிராகவும் இந்திய தேசியத்திற்கு எதிராகவும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருபவர்.
நேற்று முன் தினம் சென்னையில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் ஜெ.பாரத் என்பவர் திருமாவளவன் துதிபாடி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் இந்தியத் திருநாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் “தமிழ் தேசியத்தின் கடைசி இலக்கு என்பது தனித் தமிழ்நாடு தான்” என்று விஷ விதையை தூவியுள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசன சட்டத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் இந்திய திருநாட்டின் இறையாண்மையை கேலிக்கூத்தாக்கும் வகையிலும், வேற்றுமையில் ஒற்றுமை எனும் நம் நாட்டின் உன்னத தத்துவம் கொண்ட வாழ்வியலை அழித்துவிடும் நோக்குடனும் தனித் தமிழ்நாடு எனும் பிரிவினையை பேசி இந்திய அரசியலமைப்பின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெறுப்பை உமிந்து உறுதி செய்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தை கட்சியின் திருமாவளவன் அவர்களின் பிரிவினைக் கருத்தை கூட்டணிக் கட்சிகளான திமுகவும் கம்யூனிஸ்ட்களும் ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லை மறுக்கிறார்களா? என்பதை மக்கள் முன் விளக்க வேண்டும். மேலும் நாட்டின் சுதந்திரத்தை தாங்கள் மட்டுந்தான் தான் போராடி வாங்கிக் கொடுத்ததாக மார்தட்டிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடென்ன என்பதை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி விளக்குவாரா?
மத்திய அரசு தாமதம் செய்யாமல் உடனடியாக சுதாரித்துக் கொண்டு பிரிவினை விதையே மக்களிடையே பரப்பும் தொல்.திருமாவளவனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்கவேண்டும். கூட்டணி கட்சிகளின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசு இப்போதாவது விழித்துக் கொண்டு தொல்.திருமாவளவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று இந்துமுன்னணி வலியுறுத்துகிறது" என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Thiruma should be arrested under the National Security Act