சட்டப்பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு!
TN Assembly 2025 PMK
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாமகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து உள்ளனர்.
இந்த வெளிநடப்புக்குப் பிறகு பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசியல் கட்சிகளாக, ஜனநாயக ரீதியில் போராட உரிமை அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், அதை அனுமதிக்க அரசு தயங்குகிறது.
பேச்சுரிமையையும் போராட்ட உரிமையையும் மறுத்து, போராடியவர்களை கைது செய்து வழக்குப் பதிவு செய்வது மற்றும் மண்டபத்தில் தடுத்துவைக்கும் செயல் தகாதது.
அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், எந்த அமைப்பாக இருந்தாலும் ஜனநாயகத்திற்காக போராட உரிமை இருக்க வேண்டும். இதை திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே வலியுறுத்தி கூறுகின்றன. மக்கள் உரிமைகளை மதித்து, உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று ஜிகே மணி தெரிவித்தார்.