கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு ”கலைஞர்  நினைவு கலைத்துறை வித்தகர் விருது! - Seithipunal
Seithipunal


கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு ”கலைஞர்  நினைவு கலைத்துறை வித்தகர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது”  ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் மாதம் 3-ஆம் நாளான்று வழங்கப்படும் என்றும்,  தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரால் கடந்த 2022-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்துகின்ற வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்பேரில், விருதாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

கடந்த 2022-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் நினைவாக வழங்கப்படும் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை திரைப்படத் துறையில் தடம்பதித்து ஏறத்தாழ 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை,  வசனம் எழுதிப் புகழ் குவித்துள்ள ஆரூர்தாஸ் எனப்படும் திருவாரூர் தாஸ் அவர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்ததுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதுமை காரணமாக ஓய்விலிருக்கும் ஆரூர்தாஸ் அவர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று (03.06.2022) அன்று இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் 11.07.2024 அன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையிலான குழு கூடி, தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகெதமி விருது பெற்றவரும், முத்தமிழறிஞர் கலைஞரால் பாராட்டப்பட்டவருமான கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும், திரையுலகில் 25,000க்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், “தென்னிந்தியாவின் இசைக்குயில்” என்றும், “மெல்லிசை அரசி” என்றும் பாராட்டப்பட்டுள்ளவரும், முத்தமிழறிஞர் கலைஞரால் பல நிகழ்வுகளில் பாராட்டப்பட்டவருமான திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசிலாவுக்கும் 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கிட பரிந்துரைத்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை  30.9.2024 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Kalaithurai Vithagar Viruthu P Susila Meththa


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->