உங்களின் அரசியல் சித்து விளையாட்டுக்கு மாணவர்கள்தான் கிடைத்தார்களா? - டிடிவி தினகரன்.!
ttv dhinakaran say about annamalai university mbbs fees issue
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், " சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவித்த பிறகும் அங்கு பயின்று வருகின்ற M.B.B.S., மற்றும் B.D.S., மாணவர்களிடம் தனியார் கல்லூரிகள் அளவிற்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது கண்டனத்திற்குரியது.
கடந்த ஆட்சியில் இதே மருத்துவ மாணவர்கள் கட்டணக் குறைப்பிற்காக போராடியபோது, அன்றைய எதிர்கட்சித்தலைவராக இருந்த திரு.ஸ்டாலின், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுக்கல்லூரியைப் போலவே கட்டணம் வசூலிக்கப்படும்' என அறிக்கை விட்டிருந்தார்.
அதுமட்டுமின்றி, தன்னுடைய மகனை சிதம்பரத்திற்கு அனுப்பி, போராடிய மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதைப்போல நாடகமும் நடத்தினார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அதே மாணவர்களிடம் தனியார் மருத்துவக்கல்லூரிகளை விட அதிகக் கல்வி கட்டணம் செலுத்தவேண்டுமென உத்தரவு போட்டிருக்கிறார்கள்.
அப்படி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைகளுக்குள்ளே அனுமதிக்காமல் வெளியேற்றுகிறார்கள். தி.மு.க.வின் உண்மையான சுயரூபத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்களும், அவர்களது பெற்றோரும் உள்ளூர் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வீடு வரை நடையாக நடந்து பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது ஒரு வேஷம்; முதலமைச்சராக ஆனபிறகு இன்னொரு வேஷமா? உங்களின் அரசியல் சித்து விளையாட்டுக்கு மாணவர்கள்தான் கிடைத்தார்களா?"
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
ttv dhinakaran say about annamalai university mbbs fees issue