தமிழக பட்ஜெட் 2022 : 6.5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை - பட்ஜெட் குறித்து டிடிவி தினகரன்.!
ttv dinakaran say about tn budget 2022
தேர்தலுக்கு முன்பு தி.மு.க.வினர் அளித்த வாக்குறுதிகள் பற்றியோ, மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலோ அறிவிப்புகள் இல்லாத வெற்று அறிக்கையாக தமிழக அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது என்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அரசின் கடன் சுமை மேலும் உயர்ந்து 6.5 லட்சம் கோடி அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.
மேலும், வரும் நிதியாண்டு நெருக்கடி மிகுந்ததாக இருக்கும் என நிதியமைச்சர் அபாய சங்கை ஊதியிருப்பது, அவர் கொடுத்த அறிவிப்புகளை எப்படி செயல்படுத்தப் போகிறார் என்ற கேள்வியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அதற்கேற்றாற்போல் இல்லத்தரசிகளுக்கு வழங்குவதாக சொன்ன ரூ.1000-த்தை நிதிநிலை சரியான பிறகு பார்க்கலாம் என தட்டிக்கழித்திருக்கிறார். நகைக்கடன் தள்ளுபடி போல் இதுவும் மக்களை ஏமாற்றும் தி.மு.க.வின் மற்றொரு மோசடியாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
இது தவிர சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100/- மானியம், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5/- குறைப்பது, கல்விக்கடன் ரத்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட தி.மு.க.வின் தேர்தல் நேரத்து கவர்ச்சி வாக்குறுதிகளைப் பற்றி பட்ஜெட்டில் எதுவுமே பேசாமல் பூசி மெழுகியிருக்கிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் இந்த உதவித்தொகையை வழங்கினால் மட்டுமே திட்டத்தின் நோக்கம் முழுமையடையும்.
சிங்கார சென்னை 2.O திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கியிருப்பதைப் பார்க்கும் போது, தி.மு.க.வினர் முன்பு மிகவும் சிங்காரமாக(?!) செயல்படுத்தியதைப் போல இந்தத் திட்டமும் அமைந்துவிடக் கூடாதே என்ற ஆதங்கம் எழுகிறது. அரசு நிலங்களை நீண்ட காலக் குத்தகைக்கு விடப்போவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பது, கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எழுந்த நில அபகரிப்பு புகார்களை நினைவூட்டுவதோடு, அதைப்போன்றே அரசு நிலங்களும் அபகரிக்கப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, மிகப்பெரிய தோல்வியைத் தழுவிய சமத்துவபுரங்களை சீரமைக்கிறோம் என்கிற பெயரில் ரூ.190 கோடி நிதி ஒதுக்கியிருப்பது வீணானது. அதற்குப் பதிலாக தமிழகத்தில் பல்வேறு நிலைகளில் ஒடுக்கப்பட்டிருக்கிற மக்களின் நலனுக்காக அந்நிதியை செலவழிக்கலாம். மொத்தத்தில் நேரடியாக மக்களுக்கு பயன்தரக்கூடிய திட்டங்கள் இல்லாத நிதி நிலை அறிக்கையாக தமிழக அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது" இவ்வாறு அந்த அறிக்கையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
ttv dinakaran say about tn budget 2022