தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம் - கண்டனம் தெரிவித்த அட்டகத்தி ரஞ்சித்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள கருணாபுரம் என்ற பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் சுமார் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை உலுக்கிய இந்த அதிர்ச்சிகர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், விசிகவின் ஆதரவாளரும், திரைப்பட இயக்குனருமான ரஞ்சித் விடுத்துள்ள கண்டன செய்தியில், "கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

அதற்கு வன்மையான கண்டனங்கள்! சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!

மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மனம் வேதனையுறும் இந்த சமயத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரும் விரைவில் பூரண குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டும் இதே போன்ற நிகழ்வினால் பல உயிர்களை இழந்துள்ளோம். அந்த ரணமே இன்னும் ஆறாத நிலையில், மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அரசின் அலட்சிய போக்கையே படம் பிடித்துக் காட்டுகிறது. 

இனிமேலாவது தமிழக அரசு அலட்சிய போக்கை கைவிட்டு, இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வண்ணம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Chairman Vijay Condemning For Kallakurichi Issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->