99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும் என த.வெ.க., தலைவர் விஜய் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக 
மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு. நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும் என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார்.

இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும்.

மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை.

மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தமிழக அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது.

1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான்.

1999ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை மத்திய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.

அன்று முதல் இன்றுவரை மத்திய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை.

அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது.

இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன.

குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் மத்திய அரசு, எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு. கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது.

எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், பா.ஜ., அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது.

கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு.

நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மோடி, கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும்.

இலங்கை செல்லும் நம் பிரதமர், 'கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்' என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பிரதமரின் இந்த இலங்கைப் பயணம், தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். என்று அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK leader Vijay insists on getting Katchatheevu on a 99 year lease


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->